|
















கம்பளி ஞான தேசிகர், சென்னயிலிருந்து புதுவைக்கு வந்ததாக
சொல்லப்படுகிறது.இவருடைய உண்மை பெயர், பெற்றோர்
விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.

இவர் கம்பளி போர்வை அணிந்திருந்ததால் மக்கள் இவரை
கம்பளி சாமியார் என்று அழைத்தனர்.

இவர் புதுவையிலுள்ள பாக்குமுடையான்பட்டு, முத்தியால்பேட்டை
கவுண்டன்பாளையம் போன்ற பகுதிகளில் உலவி வருவார்.

கவுண்டன்பாளயத்தில், சாஹையார் என்ற பெயர் கொண்ட
குடும்பத்தினரிடம் மட்டும் தொடர்பு கொண்டிருந்தார்.

ஒரு இஸ்லாமிய பெரியவர், இவருக்கு குருவாக இருந்தார்
என்று சொல்லப்படுகிறது.வேலாயுதம் என்ற வைத்தியர்
இவரிடம் நெருங்கிப் பழகியதாகவும் சொல்லப்படுகிறது.

இச்தேசிகர் நிறைய கல்வி அறிவு பெற்றவர்.சுத்த
பிரம்மச்சாரி.மாயையை வென்றவர்.

சுவாமிகள்,தன் ஆன்மீகச் சக்தியால் ஊர் மக்களுக்கு
நிறைய நன்மைகள் செய்துள்ளார். பக்தர்களுக்கு கொடிய
நோய் வந்துவிட்டால் அவர்களுக்கு பச்சிலையும்
விபூதியும் தந்து குணமாக்குவார்.

ஒம்ஸ்ரீ கம்பளி தேசிக சுவாமிகள் நினைத்த இடத்தில்
மறைந்து, நினைத்த இடத்தில் தோன்றும் சக்தி படைத்தவர்.
சூட்சுமத்தில் மறைந்திருக்கும் ஒன்றை ஸ்தூலத்திற்கு
அழைத்து வரும் ஆற்றல் படைத்தவர்.

சில சமயம் சாலையில் நின்று கொள்வார்.வாயில்
ஒரு சுருட்டை வைத்துக் கொண்டு போவோர்,வருவோரிடம்
நெருப்பு கேட்பார். அவர்கள் தராவிட்டால் தன் ஆட்காட்டி
விரலை சுருட்டுக்கு முன்னால்-பத்த வைப்பது போல்
நீட்டுவார். சுருட்டு குப்பென்று பற்றிக் கொள்ளும்.

சுவாமிகள் ஒரு முறை கள்ளுக் கடைக்கு சென்றார்.
கையை நீட்டினார். கடைக்காரர்,” இன்னும் போணியாகவில்லை-போ”
என்றார்.சுவாமிகள் நெடுந்தூரம் சென்று ஒரு ஆலமரத்தடியில்
உட்கார்ந்து விட்டார். அன்று பூராவும் வியாபாரம் ஆகவேஇல்லை.
கள்ளுக்கடைக்காரர், சுவாமிகளை தேடி ஓடினார். வெகு சிரமத்திற்கு
பின் சுவாமிகளை கண்டு பிடித்து கடைக்கு கூப்பிட்டார்.
சுவாமிகள்,”நான் வருகிறேன் - நீ முன்னால் போ” என்று சொல்லி
அவரை அனுப்பினார். கடைக்காரர், ஒரு குதிரை வண்டியில்
வேகமாக கடைக்கு வந்து சேர்ந்தார். சுவாமிகள், அதற்கு முன்னரே
வந்து அங்கு உட்கார்ந்திருந்தார்.

மற்றுமொரு நாள் ஒரு சாராயக்கடைகாரனிடம் கையை
நீட்டினார். அவனும் இன்னும் போணியாகவில்லை என்று
சொன்னான்.சுவாமிகள் போய் விட்டார். அன்று முழுதும்
எவ்வளவு முயன்றும் சாராய புட்டியின் மூடிகளை திறக்க
முடியவில்லை.

பாக்குமுடையான்பட்டில் ஒரு வீட்டில், சுவாமிகள் ஊறுகாய்
கேட்டார். வீட்டுக்காரர்,” இல்லை போ” என்று துரத்தினார்.
சிறிது நேரங்கழித்து வீட்டுக்காரர் ஊறுகாயை திறந்து
பார்க்கும் பொழுது-ஊறுகாயில் புழு பூழ்த்திருந்தது.
உடனே அவர் சுவாமிகளை தேடிச் சென்று மன்னிப்பு
கேட்டார். பின், மறுபடி புழுக்கள் ஊறுகாயானது.

ஒரு சமயம், சுவாமிகளும் மற்றும் சிலரும் அடர்ந்த
கள்ளிக்காடு வழியே சென்று கொண்டிருந்தார்கள்.
ஒரு விரியன் பாம்பு சுவாமிகளை கடித்து விட்டது.
அடுத்த நாள் சுவாமிகள் இறந்திருப்பார், என்று உடன்
வந்தவர்கள் நினைக்க,காட்டில்- அந்த இடத்தில் பாம்பு இறந்து
கிடந்தது.

சுவாமிகள், தன் ஆத்ம சாதனைகளை பெரும்பாலும் தரையில்
செய்வதில்லை.தண்ணீரில் தான் செய்து வந்தார். நீரின் மேலேயே
படுத்துக் கிடப்பார். ஜலஸ்தம்பனம் செய்வது இவரது பழக்கம்.

சுவாமிகள், ஏதோ ஒரு காரணத்தால் ஜலத்தில் ஸ்தம்பனம்
செய்து கொண்டார். சில நாட்களில் ஜல சமாதியடைந்தார்.
குளத்திலேயே அவர் உடல் கிடந்தது. அவ்வழியே சென்றவர்
இதை கவனிக்கவில்லை.
மறுநாள் காலை ஒரு குரல் கேட்டது “கம்பளி தண்ணியிலே-
கம்பளி தண்ணியிலே “. இக்குரல் தொடர்ந்து கேட்டவண்ணமாக
இருந்தது.

மக்கள் ஒன்று கூடி அவர்தம் திருவுடலை, நீரிலிருந்து
வெளிகொணர்ந்து-அங்கேயே சமாதி செய்தனர்.
சமாதியின் மேல் ஒரு லிங்கமும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

சமாதியை சுற்றிலும் சுவாமியின் அனுக்கிரகம் பெற்றவர்கள்
ஏழு பேர் சமாதியடைந்துள்ளனர்.

ஒரு சமயம் குப்பம்மாள் என்ற மாது மகோதர நோயால்
துன்பப்பட்டாள்.சுவாமியின் சன்னதியில் விழுந்து அழுதாள்.
எந்த மருந்துமில்லாமல் அந்த நோய் அவளை விட்டு அகன்றது.

கம்பளி தேசிக சுவாமிகளின் சமாதியின் பின்புறம்-பெரியவர்க்கு
பெரியவர் என்னும் மகானின் சமாதியும் உள்ளது.

சுவாமிகள் 1874 -ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தட்டாஞ்சாவடி
அருகில் உள்ள ருத்திர பூமிக்குச் சமீபத்தில் சமாதியடைந்தார்.













திருமந்திரம்



 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB