|












ஓம் ஸ்ரீ ராம் பரதேசி சுவாமிகள் ஆந்திராவைச் சேர்ந்தவர்.
சிறு வயதாய் இருக்கும் பொழுதே தாயை இழந்து விட்டார்.
இவர் எதிலும் பற்றுக் கொள்ளாது, இங்கும் அங்குமாக அலைந்து
திரிந்து கொண்டிருப்பார். இவருக்கு அளித்த ஆடைகளை
அணியாமல் தூக்கியெறிந்து விட்டு- சாதாரண கோவணத்துடன்
திரிவது வழக்கம். வீட்டில் படுக்கச் செல்வார்-ஆனால் நடுரோட்டில்
படுத்துத் தூங்குவார்.

இவருக்கு ஒன்றும் தெரியவில்லையே என்று மற்றவர்கள் நினைத்து
பரிதாபப்பட்டார்கள். மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே
என்று இவர் பரிதாபப்படுவார்.இப்படி சில ஆண்டுகள் கழிந்தன.

ஒரு நாள் விடியற்காலையில்,எதையோ நினைத்து வீதியில் சென்று
கொண்டிருக்கும் போது இவரை ஒரு பெரியவர் கைத்தட்டிக்
கூப்பிட்டார். இவருடைய கன்னங்களை தன் இரு கைகளால் ஏந்தி,
இவருடைய முகத்தை ஆடாது, அசையாது அப்படியே
பார்த்துக்கொண்டிருந்தார். ராம் பரதேசி சுவாமிகளூம் அப்படியே அந்த பெரியவரை சிறிது நேரம் பார்த்தபடி-தம்மை மறந்து கல்லாக நின்றார்.

வந்த பெரியவர் சுவாமிகளுக்கு பிரம்ம உணர்வை ஏற்படுத்தினார்.
தன்னை அறியும் அறிவைப் போதித்தார்.பிரம்மப் பேரொளி வீச
வைத்தார். உடல் முழுவதும் தடவி கொடுத்து “ போடா போ” என்று
சொல்லி மறைந்து விட்டார்.

பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டை விட்டு வந்தவர்-பின் வீடு
திரும்பவேயில்லை. சிரித்துக் கொண்டே கால் நடையாக நடந்து கொண்டேயிருந்தார்.
மனிதனையும் அவனது தீயபேய்க் கூத்தையும் வெறுத்து ஒதுக்கினார்.
வேகமாக நடந்தார். நடந்துக் கொண்டேயிருந்தார்.இவருள் ஆத்ம சக்தி
வளர்ந்தது. உடலெல்லாம் பாய்ந்தது.அந்த ஆன்மக் கனலே பெரு
நெருப்பாகி அவர் மனத்தை சுட்டெரித்தது.மனத்தை சுட்டெரித்தவன்
எவனோ அவனே ஆத்ம ஞானி.அவனுக்கு நண்பர், உற்றார்-உறவினர்,
பகைவர் என்று யாரும் இல்லை. ஆத்ம ஞானி என்றால் விதியை
வென்றவன் என்று பொருள்.இப்படியே நடந்து கொண்டிருந்தவர்
-புதுவைக்கு வந்து சேர்ந்தார்.

ஓம் ஸ்ரீ ராம் பரதேசி சுவாமிகள் நல்ல உடல்வாகு கொண்டவர்.
சுமாரான உயரம்.சிவந்த மேனி. தெய்வீக முக அமைப்பு.குண்டாண
கண்கள். நீண்ட தாடியும்,சடா முடியும் கொண்டவர்.சிறு வயிறு.
இடையில் கோவணம்.அவருடைய புருவ மத்தியில் உருண்டையாக
ஒரு பொருள் சுழன்று கொண்டேயிருக்கும்.

சுவாமிகளின் இயற்பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது.
ஆனால் சதா சர்வ காலமும் “ராம் -ராம்- ராம்” என்று சொல்லிக்
கொண்டேயிருப்பார்.அதனால் இவரை “ராம் பரதேசி “ என்று மக்கள்
அழைத்தார்கள். இவர் திருமணமாகாதவர்.சுத்த பிரம்மச்சாரி.
சிவனை அடைவதற்கும், சிவ நிலை பெறுவதற்கும் பரதேசி ஆவதுதான்
உயர்ந்த நிலை. அப்படியே பரதேசி ஆனார்.

சுவாமிகள் சித்துக்களில் வல்லவர்.மக்களுக்கு தன் ஆத்ம சக்தியால்
அவர்களின் பெருங் குறைகளை தீர்த்து வைத்தார். அருளை வாரி
வழங்கினார். நாகப் பாம்பு கடித்து இறந்தவரை அவரிடம் தூக்கி வந்து
முறையிடுவார்கள். சுவாமிகள் சிரித்துக் கொண்டே
“ ஏ, நாகம்மா- இங்கே வாடி “ என்பார்.
எந்தப் பாம்பு இறந்தவரை கடித்ததோ அதே பாம்பு , அங்கு வந்து
சுவாமிகள் எதிரில் படமெடுத்து நிற்கும்.சுவாமிகள் கையை நீட்டுவார்.
நாகம் தன் விஷத்தை சுவாமிகள் கையில் கக்கும். அதை அப்படியே
விழுங்கி விடுவார்.சில சமயங்களில் நாகத்தை தூக்கி தன்
நாக்கினருகில் கொண்டு செல்வார்.நாவினில் நாகம் கொத்தும்.
அதை அப்படியே உண்பார்.
பாம்பின் விஷத்தை உணவாக கொள்வது இவரது வழக்கம்.
இப்படி நாகம் தீண்டப்பட்டவர்களை உயிர் பிழைக்க வைத்துள்ளார்.

குண்டலினி யோகத்தில் வெற்றி கண்டவர் கூட பாம்பின் விஷத்தை
உண்ணலாம் என்பது விதி. சுண்ணாம்புக் காளவாயில் இட்டு அப்பர்
சுவாமிகளை கொளுத்தியபோதும் -எல்லா பொருள்களையும்
தீக்கிரையாக்கிய அந்நெருப்பு அப்பர் சுவாமிகளை மட்டும்
தீண்டவில்லை. ஈஸ்வரனின் பாதங்களை நெஞ்சிலே நிறுத்தி
அதனிடம் தன்னையே சமர்ப்பித்தார். இதே போன்று
ஓம் ஸ்ரீ ராம் பரதேசி சுவாமிகளும் மௌன தியானத்தை
ஆத்மீக சாதனையாகக் கடைபிடித்தார்.
எதிர்பட்டோரின் அல்லல்களை நீக்கினார். ஜீவன்களுக்கு ஏற்படும்
நோய்களை குணமாக்கினார்.

நெருப்பு நெருப்பை அழிக்காது.விஷம் விஷத்தை தள்ளாது.
இத்தனையும் படைத்த பரம்பொருளுக்குள் யாவும் அடைக்கலம்.
அப்பரம்பொருளினின்று திருவருளைப் பெற்ற ஆத்ம ஞானியரிடம்
அனைத்துலகப் பொருட்களும் சரணடைவது வழக்கம்.
ஆகவே அவருக்கு முதுமை பருவம் வரவில்லை.சமாதிவரை
பாலகனாகவே காட்சியளித்தார்.
பிரணவத்தின் பேராற்றலை உணர்ந்தார்.சர்வத்துக்கும்
ஆதி காரணகர்த்தா ஓங்காரமே என்பதைஅவரது ஆத்மானுபவம்
அவருக்குச் சுட்டி காட்டியது.

சுவாமிகள் தம்மை பெரும் கயிற்றால் குழந்தைகளை விட்டு கட்டச்
சொல்வார்.அவர்களை விட்டே வீதி வீதியாக இழுத்துச் செல்லும்படி
சொல்வார்.குழந்தைகள் அவ்வாறே வில்லியனூர் முழுதும்
அவரை இழுத்துச் செல்லுவார்கள்.பிறகு குழந்தைகளுக்கு மிட்டாய்
கொடுப்பார்.

சுவாமிகள், இவ்விடத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு அதிசயம்
நடக்கப் போகிறது என்று சொன்னார். அதன்படியே, சுவாமிகள் கூறிய
இடத்தில் வில்லியனூர் புகைவண்டி நிலையம் அமயப் பெற்றது.

சுவாமிகள் தம்முடலை பிரம்ம உடலாக மாற்றி ஓங்காரப் பேருடலாக
திருப்பினார்.அப்படியே தன்னந்தனியாக பலகாலம் ஒரே இடத்தில்
அமர்ந்து விடுவார். இப்படி ஒரு சமயம்,1838 ஆம் ஆண்டு,
பரப்பிரம்மக் காட்சியை உடலோடு கண்டு கொண்டிருந்தார்.
உடல் ஆடவில்லை, அசையவில்லை.
கீழே விழவும் இல்லை. சமாதி நிலை பெற்றிருந்தார்.

இதனைக் கண்ட பாமரமக்கள், சுவாமிகள் இறந்து விட்டார் என்று
தவறான முடிவிற்கு வந்து, சுவாமிகளை சமாதி நிலையிலேயே
புதைத்து விட்டார்கள். அவரை புதைத்த இடம்,வில்லியனூர் புகை
வண்டி நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு கொடுக்கும் இடத்திற்கு
கீழேயுள்ளது.

1868 ஆம் ஆண்டு ரயில் தண்டவாளம் போடுவதற்கு, இடத்தை
அகலப்படுத்த தோண்டினார்கள். தோண்டும் பொழுது திடீரென
ரத்தம் பீறிட்டு அடித்தது. பயந்து போனவர்கள் மண்ணை மெதுவாக அப்புறப்படுத்திப் பார்த்தார்கள்.
அங்கே, சுவாமிகளின் உடம்பு அழியாமல்-உயிருள்ளவர்களின்
உடல்போல்பசுமையாக இருந்ததைக் கண்டார்கள். ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போனார்கள்.அப்படியே மெதுவாக
சுற்றுப்புறத்திலுள்ள மண்ணை அப்புறப்படுத்தி சுவாமிகளை
மெதுவாக வெளியே தூக்கி வைத்தார்கள்.
இச்செய்தி ஊர்மக்களுக்கு பரவியது. பிரஞ்சு அதிகாரிகளுக்கும்
தெரிய வந்தது. உடனே அனைவரும் அங்கு கூடினர்.ஊர் பெரியவர்கள், வயதானவர்கள் சுவாமிகளின் பெருமைகளைப் பற்றி பிரஞ்சு
அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தனர்.
சுவாமிகளுக்கு சமாதி அமைவிக்க ஒரு இடம் ஒதுக்கி தருமாறு
அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். அவ்வாறே பிரஞ்சு அதிகாரிகளும் சுவாமிகளின் பெருமையை உணர்ந்து- தற்போதுள்ள அந்த இடத்தை
ஒதுக்கி கொடுத்தனர்.

சுவாமிகள் ஜீவன் உள்ள பொழுதே சமாதி அடைந்தார்கள்.
இதற்குத் தான் ஜீவசமாதி என்று பெயர்.ஜீவ சமாதி அடைவது
என்பது சாதாரண காரியமல்ல.

ஏக்கர்


சமாதிக்கு முன்னால் இரண்டு தூண்கள் உள்ள ஒரு கருங்கல்
மண்டபம் உள்ளது.உள்ளே சென்றால் சுமார் 4 அடி உயரமுள்ள
எண்கோண அமைப்பில் மண்டபமும் அதன் கீழ் சமாதியும் உள்ளது. மண்டபத்தினுள் சுவாமிகளின் திரூவுருவம் கருங்கல்லில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. திருவுருவத்திற்கு கீழே கீழ் கண்ட வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
























அவ்வுல கத்தே பிறந்துஅவ் உடலோணடும
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே
-திருமந்திரம்












4 comments:

தேவன் சொன்னது…

arumai nanbare vaalthukkal

radjasiva சொன்னது…

நண்பரே-வணக்கம்
என்னுடைய பதிவின் முதல் வாசகர்
நீங்கள்.உங்கள் கருத்துரை எனக்கு
உற்சாகமளிக்கிறது.
தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.
உங்கள் நண்பர்களிடமும் சொல்லி
புதுவை-சித்தர்களின் ஜீவ சமாதிகளை
தரிசனம் செய்ய சொல்லுங்கள்.

எல்லோரும் இன்புற்றுரிருப்பதுவே
யல்லாமல்-யாமொன்றும் அறியேன் -
--பராபரமே.

நன்றி

In Quest of Justice... சொன்னது…

புதுச்சேரியிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அமையப்பெற்றுள்ள ஜீவ சமாதிகளை, பலரும் அடையாளம் கண்டு கொள்ள தாங்கள் எடுத்துகொண்ட கடமையுணர்வுக்கு நன்றி!

In Quest of Justice... சொன்னது…

புதுச்சேரியிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அமையப்பெற்றுள்ள ஜீவ சமாதிகளை, பலரும் அடையாளம் கண்டு கொள்ள தாங்கள் எடுத்துகொண்ட கடமையுணர்வுக்கு நன்றி!

 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB