|

ஓம் ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகள்ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகளின் சித்த பீடம்


|


ஸ்ரீ அம்பலத்தாடும் சுவாமிகள் ஜீவசமாதி
|

பவளக்கொடி சித்தர் சுவாமிகள் சித்த பீடம்

|

ஓம் ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்

ஸ்ரீ தேங்காய் சுவாமிகளின் சித்த பீடம்
ஸ்ரீ குருசாமி அம்மையார்

|


ஸ்ரீ சடையத்தம்மாள் ( எ )  குருசாமி அம்மையார்
ஓம் ஸ்ரீ சடையத்தாயாரம்மாள் சுவாமிகள்


ஞானபூமியாம்-புதுவையை நாடி வந்த எண்ணற்ற
யோகிகளுல் பெண்சித்தராம் ஸ்ரீ குருசாமி அம்மையாரும்
ஒருவர். இவர் வடமாநிலத்தில் இருந்து புதுவைக்கு
ஆன்ம விடுதலைக்காக வந்திருக்கலாம் என்று
நம்பப்படுகிறது. இறைவனின் அருள் நாடி,
தவத்தில் ஈடுபட பல ஸ்தலங்களுக்கும் சென்று
கடைசியில் புதுவையை வந்தடைந்து-இச்சித்த பூமியே
தான் தேடிய தவச்சாலை என உணர்ந்து இப்புதுவையில்
தங்கி விட்டார். இவருடைய காலம் 1890-களாக
இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

புதுவையிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில்
அரியூர் என்னும் சிற்றூரில் சர்க்கரை ஆலைக்கு
மேற்கில் இவருடைய ஜீவசமாதி அமைந்துள்ளது.


.புதுவையின் சூழலும், அமைதியும் அம்மையாருக்குப்
பிடித்துப் போக.. அரியூரிலுள்ள ஒரு தோட்டத்து
மரத்தடியில் தங்கி விட்டார். பசியைப்
பற்றிக் கவலை கொள்ளாமல், சதாகாலமும்
தியானத்திலேயே இருப்பார். இதை கவனித்த
அப்பகுதி மக்கள் அவருக்கு உணவு கொண்டு வந்து
கொடுத்து அவரை அன்போடு கவனித்துக் கொண்டனர்.
நாளடைவில் அம்மையாரிடம் அருட் சக்தி இருப்பதை
உணர்ந்து அவரை தஞ்சம் அடைந்தனர்..
தங்களுக்குள்ள மனக் குறைகளை அம்மையாரிடம் 
கொட்டுவார்களாம். அவர்களின் குறைகளை எல்லாம் 
புன்னகையுடன் கேட்டுக் கொண்டு, ஆசி புரிந்து அனுப்பி 
வைப்பாராம். அவர்களும் நிம்மதியுடன் வீடு
திரும்புவார்கள் பக்தர்கள்  தங்கள் வியாதிகளை
தெரிவிக்க அதையும் அவர் தீர்த்து வைப்பாராம்.

அம்மையாரின் உண்மைப் பெயர் யாரும்
அறிந்ததில்லை. அவருடைய நீளமான கூந்தலின்
வளர்ச்சி கண்டு அவரை “சடையம்மாள்” என்றும்
”சடையத்தாயாரம்மாள்” என்றும் அன்போடு
கூறுவார்கள்.

குருசாமி அம்மையார் சாதாரணமானவரா..
இறையருள் பெற்றவர் ஆயிற்றே! இவரிடம்
வந்து ஆசி பெற்றுச் சென்றவர்கள் அடுத்து வந்த
சில நாட்களிலேயே தங்களது குறைகள் அகலப்
பெற்றனர். அதன்பின் அம்மையாருக்கு நன்றி
தெரிவிக்கும் பொருட்டு, இவரது இருப்பிடம் தேடி
வணங்கிச் செல்வார்கள். அப்படி வருபவர்களில்
பொருள் வசதி படைத்த சிலர் அம்மையாரின்
தியானமும் அருட்பணியும் தடைபடாமல்
இருப்பதற்காக, போதிய இட வசதியை அவருக்கு
ஏற்படுத்திக் கொடுத்தனர். இன்னும் சிலர்
நிலபுலன்களையும், சில சொத்துக்களையும் அம்மையார் 
பெயருக்கு எழுதிக் கொடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.சித்த புருஷர்கள் என்றால், அவர்களின் செயல்பாடுகளும் 
வித்தியாசமாக இருக்கும். அதுபோல், குருசாமி
அம்மையாரிடம் ஒரு நடைமுறை இருந்து வந்தது.
அதாவது ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் உடல்
முழுக்கக் காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து
உடல் மேல் பூசிக் கொண்டு, சற்று நேரம்
ஊறிய பிறகு அருகில் உள்ள கிணற்றில் இறங்கிக்
குளிப்பது வழக்கமாம். எப்படி இறங்குவார் என்பது
எவருக்குமே தெரியாதாம். கிணற்றுக்குள் இருக்கும் 
அம்மையாரை எவரும் எட்டிப் பார்க்க கூடாதாம்.
அப்படி ஒரு முறை எட்டிப் பார்த்த பெண்மணி,
அம்மையாரைப் பார்க்கவே முடியவில்லை.
அவரது  நீண்ட தலைமுடி கிணற்றின் நீர்ப் பரப்பு
மேல் படர்ந்து இருந்தது. அவரைக் காணவில்லை
என்று பய உணர்ச்சியுடன் சொல்லி இருக்கிறார்.
அதுபோல் குளித்து முடித்து எப்படி மேலே ஏறி வருகிறார்
என்பதும் எவருக்கும் தெரியாது. தரைக்கு வந்தவுடன் 
அம்மையார் அப்படியும் இப்படியும் திரும்பும்போது
அவரது ஈரமான நீண்ட தலைமுடியில் இருந்து சிதறும்
நீர்த் துளிகள் பலர் மீதும் பட்டுத் தெரிக்கும். அந்த
நீர்த் துளிகள் தங்கள் மேல் படாதா என்கிற ஆர்வத்துடன்
பலரும் அம்மையாரை நெருங்குவார்களாம். நீர்த் துளிகள் 
பட்டால் தங்கள் குடும்பம் சிறக்கும் என்பதற்காகப் 
பலரும் அருகே செல்வதற்குப் போட்டி போடுவார்களாம்
.இன்றும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் குருசாமி 
அம்மையாரின்  உருவச் சிலைக்கு மிளகாய் அரைத்து 
அபிஷேகம் செய்யும் வழிபாடு நடந்து வருகிறது..

மிளகாயை அரைப்பது இந்த மடத்திலேயே செய்ய
வேண்டுமாம். வீட்டில் இருந்து மிளகாயை அரைத்து
எடுத்து வரக்கூடாது. இப்படி அரைத்துக் கொடுத்த
பெண்களின் கைகளே ஜிவுஜிவுவென்று எரியும்.போது
இதை உடலில் பூசிக்கொண்டு சிரித்த
முகத்துடன் அந்தப் பெண்களுக்கு ஆசி
வழங்குவாராம் அம்மையார்.
அம்மையாரின் அபிஷேகத்திற்கு பெண்கள் மிளகாய் 
அரைக்கும்போது  என்ன பிரார்த்தித்தாலும்,
கூடிய விரைவிலேயே அது நடந்துவிடும் என்பது
நம்பிக்கை.
அம்மையார்  ஒரு சித்திரை மாதம் பவுர்ணமி
தினத்தன்று அம்மரத்தடியிலேயே சமாதி அடைந்ததாக
கர்ண பரம்பரை செய்தி சொல்கிறது.

அதன்பிறகு அவரைப் பற்றிய சரியான தகவல்
இல்லை. அச்சமாதியையும் கவனிப்பார் இல்லை.
அந்த இடம் தமிழக-புதுவை எல்லையாக இருந்த
படியால், இரு ராணுவத்தினரும் யாரையும்
அப்பகுதியில் தங்க அனுமதிக்கவில்லை.
அதனால், அம்மையாரின் ஜீவசமாதியையும்
யாரும் பராமரிக்க இயலாமல் போனது.சில ஆண்டுகளுக்கு பின், நடராஜ சுவாமிகள்
என்னும் அடியார் தஞ்சாவூரிலிருந்து
திருத்தல யாத்திரையாக புதுவை வந்தார்.
 புதுவையில் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளின்
ஜீவசமாதி அமைந்துள்ள கோவிலில்
அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.
அவரின் ஆழ்ந்த தியானத்தின் பலனாக
ஒரு குரல் அவரை குருசாமி அம்மையாரின்
ஜீவசமாதி இடத்திற்கு சென்று பணி
செய்யுமாறு பணித்தது.
ஐயனின் கட்டளையை சிரமேற் கொண்டு
அரியூருக்கு விரைந்தார். அம்மையார் வாழ்ந்த
தோட்டம் முழுதும் புதர் மண்டிப் போய் கிடந்தது.
அப்புதரினுள் அம்மையாரின் சமாதியை தேடி
கண்டு பிடிப்பது மிகவும் சிரமமாய் இருந்தது.
அம்மையாரை நினைவில் இருத்தி தியானத்தில்
ஆழ்ந்தார். அம்மையாரும் நடராஜ சுவாமிகளுக்கு
காட்சி கொடுத்து தன் இருப்பிடத்தை உணர்த்தி
மறைந்தார்கள்.
நடராஜ சுவாமிகள் குருசாமி அம்மையாரின்
ஜீவசமாதியை வெளிக்கொணர்ந்து இவ்வுலகுக்கு
அறிவித்தார். தன் கடன் இனி அம்மையாருக்கு
பணி செய்து கிடப்பதே எனத் தெளிந்து, பணி
செய்து வரலானார். அம்மையாருக்கு அக்காலத்தில்
பொதுமக்கள் கொடுத்த சொத்துக்களை மிகவும்
சிரமப்பட்டு தேடிக் கண்டு பிடித்து- அவற்றைக்
கொண்டு கல்வி, அன்னதானம், தினசரி வழிபாட்டுச்
செலவுகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.
1970-ம் ஆண்டு நடராஜ சுவாமிகள் காலமானார்.
அவருக்குப் பின் அத்திருக்கோவிலை தமது
சீடரான சீதாராமை கொண்டு நடத்தி வர
பணித்தார். இந்த இரு அடியார்களின் சமாதிகளும் குருசாமி
அம்மையாரின் சமாதிக்கு அருகிலேயே வைக்கப்பட்டது.
அம்மையாரின் சமாதிக்கு அருகில் அந்தப் புனிதக்
கிணறு இன்று பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.

குருசாமி அம்மையாரின் குருபூஜை தினம் சித்திரை
மாதம் பவுர்ணமியன்று மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது.|

ஓம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்

சிவப்பிரகாச சுவாமிகள், காஞ்சிபுரத்தில் இறைவன் திருவருளால்
பிறந்தார்.

சிறுவயதிலேயே தந்தையை பறிகொடுத்துவிட்டதால்
தனது தமையன் வேலாயுதம், கருணைப்பிரகாசம்,தமக்கை
ஞானாம்பிகை ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு
வந்து சேர்ந்தார்.

தனது தந்தையின் குருவான குருதேவரை
தரிசித்து. அவருடனே தங்கியிருந்து கல்வி கற்றார்.

சிவஞானத்தில் பெருநிலை அடையப்பெற்ற
குருதேவரிடம் தீட்சை பெற்றார்.
சதா சிவசிந்தனையிற் திளைத்திருந்தார், சுவாமிகள்.

திருவண்ணாமலை கிரிவலத்தின்
பெருமையை தன் உள்ளுணர்வால் உணர்ந்து புறப்பட்டார்.

ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும்
அருணாச்சலேஸ்வரர் மேல் பாடல் பாடி-அன்றைய தினத்தில்
100 பாடல்கள் இயற்றினார்.

அதற்கு “சோண சைலமாலை” என்று பெயர்.

சுவாமிகள் மேலும் ஆழ்ந்த கல்வி பயில வேண்டும் என்ற
ஆசையினால் தமது சகோதரர்களுடன் தென்னகப் பிரயாணம்
தொடங்கினார். திருச்சிக்கருகில் உள்ள பெரம்பலூரில் இரண்டு
ஆண்டுகள் தங்கியிருந்து சிவபூஜையை செய்து வந்தார்.

அங்கிருந்து திருநெல்வேலி வந்து
தாமிரபரணி ஆற்றங்கரையருகில் உள்ள சிந்துபூத்துறைக்கு
வந்து சேர்ந்தார்.அவ்வூரிலுள்ள தர்மபுர ஆதினத்து கட்டளை
தம்பிரான் வெள்ளியம்பல சுவாமிகளுக்கு சீடனாக இருந்து
கல்வி கற்க விரும்பினார்.

வெள்ளியம்பலவாணர் தருமை ஆதீனம் நான்காம் பட்டத்தில்
விளங்கிய குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக
பரமாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றவர்,காசிக்கு சென்று
குமரகுருபரரிடம் கல்வி பயின்றவர்.

அத்தகைய இலக்கண இலக்கிய செம்மலிடம் மாணாக்கன் ஆவதைப்
பெரும் பேறாகக் கருதினார் சிவப்பிரகாச சுவாமிகள்.

சிவப்பிரகாசரின் தமிழார்வத்தை அறிந்த முனிவர்- அவரின்
ஆற்றலை அறிய விரும்பி “கு” என்று தொடங்கி “கு” என்று
முடித்து இடையே ஊருடையான் என்று வருமாறு நேரிசை
வெண்பா ஒன்று பாடுமாறு ஆணையிட்டார்.

சுவாமிகளும் தயங்காமல் உடனே பாடிக் காட்டினார்.
வெண்பாவைக் கேட்டவுடன் சிவப்பிரகாசரின் ஆற்றலைக் கண்டு
வெள்ளியம்பல சுவாமிகள் மிகுந்த வியப்புற்றார்.அவரை
அப்படியே ஆரத் தழுவிகொண்டார்.” இத்தகைய ஆற்றல் படைத்த
உமக்கா தமிழ் சொல்லித்தர வேண்டும் “ என்று கேட்டார்.

வெள்ளியம்பல சுவாமிகள், சிவப்பிரகாசரை தன்னுடன்
இருத்திக்கொண்டு சுவாமிகளின் சகோதரர்களாகிய
வேலாயுத சுவாமிகள், கருணைப்பிரகாச சுவாமிகள் ஆகிய
இருவருக்கும் பதினைந்து நாட்களில் ஐந்திலக்கணங்களையும்
கற்றுக் கொடுத்தார்.

சிவப்பிரகாசரின் எண்ணம் நிறைவேறியது.
மகிழ்ச்சியில் மலர்ந்தார். பெரம்பலூரில் தனக்கு காணிக்கையாக
கொடுத்த முந்நூறு பொற்காசுகளை தனது குருவின் காலடியில்
சமர்ப்பித்தார்.வெள்ளியம்பல சுவாமிகளோ,” இவை எமக்கு
வேண்டா, அதற்குப் பதிலாக திருச்செந்தூரில் எம்மை இகழ்ந்து
பேசுதலையே இயல்பாக கொண்டு திரியும் ஒரு தமிழ்ப்புலவனின்
அகங்காரத்தை ஒடுக்கி எம் கால்களில் விழச்
செய்ய வேண்டும் “என்றார்.

குருவின் அவாவை நிறைவேற்றும் பொருட்டு திருச்செந்தூர்
புறப்பட்டார். கோவிலினுள் எழுந்தருளியிருக்கும்
முருகப் பெருமானை தரிசித்து விட்டு-வலம் வந்தார்.
அப்பொழுது முனிவர் சொன்ன அப்புலவனைக் கண்டார்.

புலவனும், சுவாமிகளைக் கண்டு இவர் வெள்ளியம்பல
சுவாமிகளிடமிருந்து வந்தவர் என்பதையறிந்து வசை மாறி
பொழிந்தான். இருவருக்கும் விவாதம் முற்றியது.

புலவன் சுவாமிகளை பந்தயத்திற்கு அழைத்தான். இருவரும்
நீரோட்டகயமகம் பாடவேண்டும் என்றும் யார் முதலில்
முப்பது பாடலை பாடி முடிக்கிறார்களோ அவரே ஜெயித்தவர்-
தோற்பவர் மற்றவர்க்கு அடிமையாக வேண்டும் என்றான்.

சிவப்பிரகாச சுவாமிகளும் சிறிதும் தயங்காது பாடி முடித்தார்.
ஆனால் புலவனால் ஒரு பாடல் கூட பாட முடியவில்லை-வெட்கித்
தலைகுனிந்து சுவாமிகளிடம் சரணடைந்தான்.

அதற்குச் சுவாமிகள் அடியேன் வெள்ளியம்பல சுவாமிகளின்
அடிமை-நீர் அவருக்கே அடிமையாதல் முறை” என்று கூறி தம்
குருநாதரிடம் அழைத்துச் சென்று அவருக்கே
அடிமையாக்கினார்.

வெள்ளியம்பல சுவாமிகள் அகங்காரம் கொண்ட
புலவனின் அகந்தையை அடக்கி அவனுடைய கவனத்தை
பரம் பொருளிடத்தே செலுத்த வைத்து “நல்வாழ்வு-வாழ்ந்து வா”
என்று கூறி அனுப்பி வைத்தார்.

குருநாதரிடம் பிரியாவிடை பெற்று தமது இளவல்களுடன்
துறைமங்கலம் வந்து, பின்னர் அங்கிருந்து வாலிகண்டபுரத்தின்
வடமேற்கு திசையிலுள்ள திருவெங்கையிலே சில காலம் தங்கி
சிவபூஜை செய்துவந்தார்.

வள்ளல் அண்ணாமலை ரெட்டியார் கட்டி தந்த மடத்தில்
தங்கியிருந்தவாறே -திருவெங்கைக் கோவை,திருவெங்கைக்
கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கை அலங்காரம் என்னும்
நான்கு நூல்களைத் தந்தருளினார்.

சிவப்பிரகாச சுவாமிகள், தமது உடன்பிறந்தவர்களுக்கு திருமணம்
செய்து வைத்து-அண்ணாமலை ரெட்டியாருடன் புனித பயணம்
புறப்பட்டார்.

சிதம்பரத்திற்கு வந்து, அங்கு ஆத்ம சாதனையில் தீவிரமாக
இறங்கினார். அங்கு சிவப்பிரகாச விசாகம்,தருக்க பரிபாஷை,
சதமணிமாலை, நான்மணி மாலை முதலிய நூலகளை
செய்தருளினார்.

அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து சிவபெருமானை தரிசனம்
செய்து -சில காலம் தங்கியிருந்து விட்டு-பின்னர் காஞ்சிபுரத்திற்கு
புறப்பட்டார்கள். வழியில் சாந்தலிங்க சுவாமிகளை கண்டு அளவளாவி
மகிழ்ந்து, அவருடன் சிவஞான பாலய சுவாமிகளை தரிசிக்க புதுவை
வந்து,அங்கிருந்து பிரம்மபுரம் வந்து சேர்ந்தனர்.

சாந்தலிங்க சுவாமிகள், சிவஞான பாலைய சுவாமிகளின்
பேராற்றலை -பெருமைகளை வானளாவ புகழ்ந்து கூறி,
அவரைப் பற்றி ஒரு பா பாடுங்களேன் என்றார்.அதற்கு சிவப்பிரகாச
சுவாமிகள்- இறைவனைத் துதிக்கும் நாவால்
மனிதனை துதியேன் என்று கடுமையாக கூறி விட்டார்.

இருவரும் அருகிலுள்ள புத்துப்பட்டு ஐயனார் கோவிலின் பின்புறம்

அன்றிரவு தங்கினர்.சிவப்பிரகாச சுவாமிகளின் கனவில்
முருகப் பெருமான்ம்மயில் வாகனத்தோடு காட்சியளித்தார்.
நிறைய பூக்களை முருகப்பெருமான் சுவாமிகளிடம் கொடுத்து
இவற்றை ஆரமாக தொடுத்து எமக்குச் சூட்டுவாய்
என்றருளினார்.

காலையில் கண் விழித்ததும் சாந்தலிங்க சுவாமிகளிடம்
கனவில் முருகப் பெருமான் வந்ததை தெரிவித்தார்.

சாந்தலிங்க சுவாமிகள்,சிவஞான பலைய சுவாமிகளுக்கு,
முருகப் பெருமான் குரு.அவர் மீது பேரன்பு கொண்டு பெரும்
பூஜை செய்து வருகிறார்-தேசிகர்.

சிவஞான பாலைய சுவாமிகளின் பெருமையை
உணர்த்துவதற்காகவே முருகபெருமான் சிவப்பிரகாச சுவாமிகளின்
கனவில் வந்து உணர்த்தியுள்ளார்- என்று விளக்கினார்.

மறுநாள் சிவஞான பாலைய சுவாமிகளை இருவரும் சந்தித்தனர்.
தாலாட்டு, நெஞ்சு விடு தூது என்ற இரு பிரபந்தங்களைப் பாடி தேசிகர்
சன்னிதானத்தில் அரங்கேற்றினார்-சிவப்பிரகாச சுவாமிகள்.

சிவஞான பாலைய சுவாமிகளும், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு
ஞானாபதேசம் செய்தார். இருவரும் குருவின் சீடர்களானார்கள்.
சிவஞான பாலைய சுவாமிகளின் சொற்படியே தன் தமக்கையை
சாந்தலிங்க சுவாமிகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

தேசிகரிடம் விடைபெற்று, காஞ்சிபுரத்திற்கு வந்து கன்னட மொழியில்
எழுதப்பட்ட விவேக சிந்தாமணி என்னும் நூலின் ஒரு பகுதியை
தமிழில் வேதாந்த சூடாமணி என்று மொழிபெயர்த்தார்.மேலும்
சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்கலீலை என்ற நூல்களை எழுதினார்.
திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ் என்ற இரண்டு நூல்களை
தன் ஞானாசிரியர் மேல் பாடினார்.

காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டு கூவம் என்னும் சிவத்தலத்தை
அடைந்து திருக்கூவப்புராணம் பாடி அருளினார்.

அங்கிருந்து புறப்பட்டு பொம்மையாபாளையத்திற்கு வந்து தன்
ஞானாசிரியரை தரிசித்து லிங்கதத்துவம், அனுபவம், ஈசனின் உறைவிடம்
அவத்தைகள் போன்ற நுணுக்கமான தத்துவ விஷயங்களை தெரிந்து
கொண்டார். பின்னர் விருத்தாசலம் புறப்பட்டார்.

சிவஞான பாலைய சுவாமிகள் இறைவனோடு கலந்த செய்தியை
கேள்விப்பட்டு மறுபடி பிரம்மபுரத்திற்கு வந்தடைந்தார். குருவின்
சந்நிதானத்தில் வீழ்ந்து, அழுது புலம்பினார். தம் குருவின் மீதிருந்த
அளவற்ற அன்பினால் பலமுறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார்.

பொம்மையார்பாளைய கடலோரத்தில் அமர்ந்து மணலிலே “நன்னெறி”
வெண்பா நாற்பதையும் தன் விரலால் எழுத, அங்குள்ளோர் அதை
எழுதிக் கொண்டனர்.

காலம் வேகமாக சென்றது. பிரம்மபுரத்திலிருந்து புறப்பட்டு புதுவை
வந்து சிவதலங்களை வணங்கி விட்டு,நல்லாத்தூர் வந்து சேர்ந்தார்.

அது ஒரு சிற்றூர்.எங்கு பார்த்தாலும் நுணா மரங்களும், கள்ளிக்
காடுகளுமாக இருந்தது. அவ்வூரில் ஒரு சிவன் கோவிலும் இருந்தது. அக்கோயிலின் அருகே உள்ள நுணா மரத்தின் கீழ் அமர்ந்து
தன் தவத்தை மேற்கொண்டார்.

அதிகாலையில் எழுந்து நல்லாற்றிலிருந்து புறப்பட்டு வில்லியனூர்
அருகே ஓடும் அற்றில் நீராடுவார்.அங்குள்ள வில்வ இலைகளை
சிவபெருமான் பூஜைக்காக பறித்துக் கொண்டு, நல்லாற்றூருக்கு அதிகாலையிலேயே சென்று விடுவார்.

அங்கு இவ்வாறு இருக்கும் பொழுது, சிவஞான மகிமையும்
அபிஷேக மாலையும் நெடுங்கழி நெடிலும், குறுங்கழி நெடிலும்,
நிரஞ்சன மாலையும், கைத்தலமாலையும்
சீகாளத்திப்புராணத்தில் கண்ணப்பச் சருக்கமும், நக்கீரச்சருக்கமும்
எழுதினார்.

பல ஆண்டுகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டிருந்தார்.தவம் முடிந்தது.
தவ சித்தி பெற்றார்.சுவாமிகளின் பூஜைகள் பலிக்கத் தொடங்கின.
அவருக்கு முப்பத்திரண்டு வயது வந்தது.தாம் சிவமாகும் காலம்
வந்ததை உணர்ந்தார்.

புரட்டாசி மாதம- பௌர்னமி திதியில் பரம்பொருளோடு
ஐக்கியமானார்.

எங்கு சுவாமிகள் சித்தி அடைந்தாரோ அங்கேயே சுவாமிகளை
சமாதி வைப்பதற்காக அங்குள்ள நுணா மரம் வெட்டப் பட்டது.
அந்த நுணா மரத்தின் கீழ் தான் சுவாமிகள் தவம் செய்வது வழக்கம்.
வெட்டப் பட்ட நுணா மரத்தை அங்குள்ள ஒரு வீட்டில் கொண்டு போய் போட்டார்கள்.அக்கணமே அந்நுணா மரம் எரிந்து சாமபலாகியது.
ஆனால் வீட்டிலிருந்த வேறு எந்தவொரு பொருளையும் அந்நெருப்பு தீண்டவில்லை.

சுவாமிகளின் காலம் 17-ம் நூற்றாண்டாகும்.சுவாமிகள் வாழ்ந்தது
32 ஆண்டுகள்.

சுவாமிகளின் நூல்களிலே ஆழ்ந்த சைவ சித்தாந்தக் கருத்துக்கள்
,தெளிவான உயிர்நிலைத் தத்துவங்கள், மெய்ப் பொருளைக்
காட்டுகின்ற விரிவான தர்க்க பாஷை யாவும் மலை போல்
குவிந்துள்ளன.

முப்பத்திரண்டு வயதில் முப்பத்திரண்டு தெய்வீகத் தத்துவங்களை
செந்தமிழில் தந்தருளியவர் ஓம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்.

திருமந்திரம்


|

ஓம் ஸ்ரீ சக்திவேல் பரமானந்த குரு சுவாமிகள்ஓம் ஸ்ரீ சக்திவேல் பரமானந்த குரு சுவாமிகள்,தென்னாற்காடு
மாவட்டத்திலுள்ள கடலூரில் 175 ஆண்டுகளுக்கு முன் அந்தண
மரபில் தோன்றினார்.

அந்தண மரபுப்படி வேத பாராயணங்கள்,உபநிஷத்துக்கள்
அனைத்தும் கற்பிக்கப்பட்டன.சாஸ்திரங்களின் வலிமையை உணர
உணர மந்திர சக்தியின் அற்புதம் அவருக்குத் தென்பட்டன.
தேவியை பூஜிக்க இயந்திரங்களை பயன்படுத்தினார்.
அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்திருக்கும் பரம்பொருள் தன்னுள்
இருப்பதை அறிந்துணர்ந்தார்.

இளம் வயதில் தந்தையை இழந்தார்.சகோதரர்களிடையே சொத்து
தகராறு தோன்றியது. நம்மை அழிக்கும் சக்திக்கு பங்கு போட்டுக்
கொள்ள சண்டையிடும் துன்மர் கூட்டத்தினிடையே நாமிருப்பது
வீண் என்று வீட்டை விட்டு புறப்பட்டார்.

ஆத்ம ஞானமே நமக்குத் தேவை. ஆத்ம தரிசனமே தாம் காண
வேண்டிய காட்சி என்று கங்கை, காசி,ஹரித்துவார்,பண்டரிபுரம்,
காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கெல்லாம் சுற்றிச் திரிந்தார்.
இதன் விளைவாக மன உளைச்சல் நின்றது.
கடைசியாக புதுவை வந்து சேர்ந்தார்.

எங்கும் இறைவன் மயம் என்ற உணர்ச்சி அவருள் பொங்கி வழிந்தது.

அனைத்திலும் இறைவனைக் கண்டார். அதனால் தரையில் கால்
வைத்து நடக்கவும் கூசினார்.மக்கள் பேசுவதைப் பார்த்து இறைவன்
அவர்கள் உருவில் பேசுகிறார் என்பார். நாய் குரைப்பதைப் பார்த்து
இறைவன் அந்த உருவத்தில் பேசுகிறார் என்பார்.

கதிரவனின் பிரகாசத்தைப் பார்த்து ஆனந்தக் கூத்தாடுவார்.

கடலின் அழகையும் ,ஆழத்தையும் பார்த்து “இறைவா-உன்னை உணர
முடிகிறதே “ என்பார். நெருப்பில் கையை விட்டு “இறைவா- உன்னை
தொட முடிகிறதே” என்பார்.

” இறைவா- நீ எங்குமிருக்கிறாய்-உன்னை நான் எங்கும் பார்க்கிறேன்,
உன்னிடம் பேசுகிறேன் -விளையாடுகிறேன். இதைவிட எனக்கு என்ன
வேண்டும்-இப்படியே இருந்தால் போதும்” என்று ஆனந்தக்கண்ணீர்
விடுவார். கண்ணீர் தாரை தாரையாக வழியும்.சதா சர்வ காலமும்
அவர் கண்ணீர் விட்டுக் கொண்டேயிருப்பார்.

இறைவன் மேல் ஒரே அன்பு மயமாக ஆனந்த மயமாக இருப்பார்.

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருகி இராப்பகல் ஏத்துவன்
என் பொன் மணியை இறைவனை ஈசனை
தினபன் கடிப்பன் திருத்துவன் தானே
-- திருமூலர்

சுவாமிகள் ஏகாந்தத்தில் நிலைத்த உடன் சத்துவ குணத்திலிருந்து
நிர்குணத்திற்கு வந்தார்.இத்தருணத்தில் ஓம் ஸ்ரீ ஞானானந்த
சுவாமிகளின் சந்திப்பு ஏற்பட்டது.இமயமலையில் இருவரும்
ஆத்ம சாதனை பயிலும் போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.
பிறகு சுவாமிகள் புதுவைக்கு வந்து தங்கியிருக்கும் பொழுது,
ஞானானந்த சுவாமிகளின் சந்திப்பு மீண்டும் ஏற்பட்டது.

சுவாமிகள் ஆனந்தமயமாக காட்சியளித்தார். அவரின்
லட்சுமிகடாட்சமான முகத்தை கண்டு-மக்கள் அவரின் சக்தியை
உணர்ந்தார்கள். சுவாமிகளிடம் ஆசி பெற்றவர்களின் நோய் குணமாகியது.அப்பகுதி மக்களின் துன்பம்
சிறுக சிறுக மறைந்தது.யாராவது தங்கள் கஷ்டத்தை சுவாமிகளிடம்
சொன்னால்-இதோ இறைவன் இருக்கிறானே,கஷ்டமெங்கே,
ஆனந்தமாக இருக்கிறான்" சந்தோஷமாக போ” என்பார்.
வந்தவரின் கஷ்டம் அக்கணமே மறைந்து விடும்.

சுவாமிகளை தரிசனம் செய்தால் அன்று பூராவும் சந்தோஷமாக
இருக்கும் என்பதை மக்கள் கண்டுணர்ந்தார்கள். நம்பிக்கையும்
ஏற்பட்டது. அவரின் பேரன்பு பிரபஞ்ச முழுவதும் பரவத்
தொடங்கியது. ஒரு நாள் மாலை அப்படியே உட்கார்ந்திருந்தார்.
எதையோ பார்த்து சிரித்து கொண்டிருந்தார்.ஒரு திக்கையே நோக்கி
தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

பக்கத்திலிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அருகிலிருந்தவர்கள் ஆச்சரியத்தோடு வினவினார்கள்.
”அங்கே ஆண்டவன் சிரிக்கப் போறான்டா -
ஆயிரமாயிரம் பேர் வாழப் போறாண்டா “ என்று துள்ளிக்
குதித்தோடினார். தன் வேட்டியை எடுத்துக் காட்டி,
“துணி வரப் போகுதடா-துணி வரப் போகுது”
என்று சிரித்தார்.சற்று நேரம் கழித்து மீண்டும் “எல்லோரும் ஏறிப் போக
பெரிய வண்டி வரப்போகுது- எப்போதும் ஓடும் “ என்று சிரித்துக்
கொண்டிருந்தார்.

சில காலம் அமைதியாக இருந்தார்.இரவிலும் பகலிலும் தூங்குவது
இல்லை.ஒரு நாள் விடியற்காலையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு
தரிசிக்க வருவோரையெல்லாம் “ நாளைக்கு வாங்கோ- நாளைக்கு
வாங்கோ”என்றார். ஒவ்வொருவரையும் பார்த்து கரம் கும்பிட்டு
சொன்னார். இதைப் பாத்தவர்களுக்கு உடல் சிலிர்த்தது.
சுவாமிகள் ஏதோ முக்கியமான செய்தி சொல்லப் போகிறார்
என்று நினைத்தனர்.

சுவாமிகள் சொற்படியே மறுநாள் சுவாமிகளைப் பார்க்க வந்தார்கள்.

ஓம் ஸ்ரீ பரமானந்த சத்குரு சுவாமிகள் பரமானந்தத்தில் திளைத்து
சமாதியில் மூழ்கி விட்டார்.

செய்தி காட்டுத்தீ போல பரவியது.ஆத்ம சாதகர்கள், பக்தர்கள்,
ஞானிகள் என அனைவரும் கூடி விட்டனர்.புதுவை முதலியார்பேட்டை,காராமணிக்குப்பத்தில்
சுவாமிகளின் அருளுடலை அடக்கம் செய்தனர்.சுவாமிகள் வழிபாடு
செய்த லிங்கம் சமாதியின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுவாமிகள் பூஜித்த இயந்திரமும் அங்கேயே உள்ளது.

சுவாமிகள் குறிப்பிட்ட படியே அந்த இடத்தில் “நெசவாலை” ஒன்றும்
ரயில் தண்டவாளமும் பிற்காலத்தில் உருவானது.
சுவாமிகள் வாழ்ந்த காலத்தைச் சரியாக கணக்கிடுவதற்குப் போதிய
சான்றுகள் இல்லை.இருப்பினும் கி.பி. 1830 லிருந்து கி.பி.1860 வரை
அல்லதுகி.பி. 1870 லிருந்து கி.பி.1890 வரை இருக்கலாம் என்று
செவிவழிச் செய்திகள் செப்புகின்றன.
ஓம் ஸ்ரீ சக்திவேல் பரமானந்தரின் சித்த பீடம்
திருமந்திரம்
 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB