|


|

சித்தர்களின் ஜீவ சமாதி பீடமே கலியுகத்தில் வணங்கத்தக்க
இடமாகும்.ஏனெனில்,பிரபஞ்ச ஆற்றலை (இறைசக்தியை)
இப்பூமியில் நிரந்தரமாக நிலைப்படுத்தி வைத்துள்ள இடமே
சித்தர்களின் ஜீவசமாதி பீடங்களாகும்.

தற்போது உள்ள பழங்கோவில்கள் எல்லாம் சித்தர்களின்
மறைவிடங்களே.அவர்களின் ஜீவசமாதி மீது தான் புகழ் பெற்ற
கோவில்கள் அமைந்துள்ளன என்பது உண்மை.அவர்களின்
ஆற்றலே அங்கு பிரகாசிக்கிறது.

திருமலை திருப்பதி - சித்தர் மகான் கொங்கனவர்
பழனி மலை முருகன் -- சித்தர் மகான் போகர்


சித்தர்களின் ஜீவசமாதியை வணங்கினால் ஆண்டவனை
வணங்கியதாகும். ஆண்டவனை வணங்கினால் அவர்களை
வணங்கியதாகும். அங்கு சென்று ஊணுருக, உயிருருக,விழி கசிய தியானிப்போர்க்கு அப்பீடத்தில் குடி கொண்டிருக்கும்
சித்தர் பெருமக்கள் தாம் பெற்றுள்ள பேராற்றலால் பக்தர்கள்
குறையை போக்கி,நல்வழி அருளுகிறார்கள்.
இது முற்றிலும் உண்மை.

அனைத்திற்கு அப்பாலும், அனைத்திலுமாய் நின்று இப்பிரபஞ்சங்களை
தம் விருப்பம் போல் படைத்து-இயக்கும் பரம்பொருள், ஞானிகளின்
உள்ளே நடம் புரிகிறார்.

சிற்பங்கள் கட்டின கோவிலிலே அங்குத்
தற்பரன் வாழ மாட்டான்- குதம்பாய்
தற்பரன் வாழ மாட்டான்.
சித்தர்கள் ஞானிகள் ஜீவசமாதியில்
தற்பரன் நித்யம் தாண்டவம் புரிவானடி-குதம்பாய்
தாண்டவம் புரிவானடி.-குதம்பை சித்தர்.


ஞானிகளை சத்திய நிலையில் தெளிந்தறிதலினால் பரம்பொருளை
அறிய முடியும். பரம்பொருளை அறிந்துணர சித்தர்களின்
ஜீவசமாதியை பூஜிக்க வேண்டும்.

புண்ணிய பூமி, வேதபுரி என காலங்காலமாக,அகத்தியர்
முதல் அரவிந்தர் வரைஅனைவரையும் அரவணைத்து அவர்களின்
அருள் சாதகத்திற்கு,இறை சாதகமாக்கிய நம் புதுவை
மண்ணில் ஜீவ சமாதியாகியுள்ள சித்தர்கள் அநேகபேர்.
அவர்களில் பிறமதத்தினரும் உண்டு என்பதுவும் நம்
மண்ணின் பெருமை.

இவ்விதம் நமக்கு தெரிந்தும் இன்னும் தெரியாத பல
சித்தர்கள் உலவி,தம் அருள் ஆற்றலால் புண்ணியமாக்கிய
பூமிதான் நம் புதுவைமண்.இப்படி புதுவையிலும் அதை
சுற்றியுள்ள பிற இடங்களிலும் உள்ள சித்தர்களின் ஜீவ
பீடத்திற்குச் சென்று வழிபட்டு அவர்களின் பேரருளை
பெறுவோமாக..
|

புதுவை -சித்தர்கள் வாழ்ந்த ஒரு சித்த பூமி.
புதுவை - தவசீலர்களுக்கு ஞானத்தை வாரி வழங்கிய
ஒரு ஞான பூமி.
புதுவை - பரம்பொருளின் அருள் பெற்ற ஒரு புண்ணிய பூமி.


புதுவை என்ற இச்சிறு நிலப்பகுதியில் ஐந்நூறு
ஆண்டுகளுக்குள் சுமார் 32 ஆத்ம ஞானிகள் சமாதி
எழுந்தருளியுள்ளார்கள்.அவர்கள் இவ்வுலகின் எல்லா
பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கடுந்தவம் மேற்கொண்டு
இறை தரிசனம் பெற்று இறைவனோடு ஐக்கியமாகி
விட்டார்கள்.

ஆத்ம ஞானிகளை தன்னகத்தே அன்போடு அழைத்து
அவர்களின் ஆத்ம சாதனைக்கு உதவியும் செய்து
அவர்களுக்கு வெற்றியும் தருகிறது புதுவை என்ற
இப்புண்ணிய பூமி.
ஞானம் விளைகின்ற காரணத்தால், ஞானிகள் தவம் புரியும்
இடமாக இருப்பதால்-இப்புதுவையை ஞான பூமி என்றே
அழைக்கிறார்கள்.

புதுவை புண்ணியம் செய்த பூமி. புண்ணியவான்கள்
தோன்றிய பூமி.ஆத்மஞானிகள் இப்பூமியின் மேல் காதல்
கொண்டு ஆனந்த மேலீட்டால் வருகிறார்கள்.

இச்சித்த பூமியைப் பற்றி ஒரு தனிபாடல் இவ்வாறு
பாடப்பட்டுள்ளது;-

எத்தலம் சென்றிட்டாலும்
எத்தீர்த்தம் ஆடிட்டாலும்
இந்த சித்தர்வாழ் புதுவைபோல்
சிறந்தது ஒன்றில்லை கண்டீர்
முத்தியும் உதவும் ஞானம்
முப்பொருள் தனையும் ஈந்து
சித்தனே வந்து இங்கு
சிவகதி அடைந்தார் அன்றோ


முற்காலத்தில் அகத்திய மாமுனிவர் சமைத்த “வேதபுரி”
என்னும் இடத்தில் தான் தற்சமயம் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் நிறுவப்பட்டுள்ளதென்பர்.

புதுவைக்கு வந்த அகத்தியர் ரெட்டியார்பாளயத்தில் உள்ள
இடத்தில் வேத பாடசாலை
அமைத்து,உலகம் உய்ய, அமைதியோடும்,ஆனந்த
பரவசத்தோடும் வாழ வேத ஒலியைப் பரப்பினார்.
அதன் விளைவாக ஞானிகள் புதுவைக்கு விஜயம்
செய்கிறார்கள்.

வடலூர் இராமலிங்க சுவாமிகள் புதுவை அம்பலத்தாடையார்
மடத்து வீதியில் சுமார் மூன்று மாதங்கள் தங்கியிருந்து,
சன்மார்க்கத்தின் சக்தியை பரப்பினார்.

கர்னாடகா யுத்ததின் போது, சிதம்பரத்தில் இருந்து, திருவாசக
வெள்ளி பெட்டகத்தை--யுத்தத்தின் அழிவிலிருந்து மீட்டு
புதுவைக்கு கொண்டு வந்து பாதுகாத்தார் ஸ்ரீ நாகலிங்க
சுவாமிகள். இன்றும் திருவாசகம் அடங்கிய வெள்ளி பெட்டகம்
புதுவை அம்பலத்தாடையார் மடத்து வீதியில் உள்ள
ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் மடத்தில் வைத்து பாதுகாக்கப்
பட்டு வருகின்றது.மகா சிவராத்திரியன்று திறக்கப்பட்டு
பூஜைகள் செய்யப்படுகின்றது.

மகாகவி பாரதியார் புதுவையில்-குயில் தோப்பில் பாடல்
இயற்றிய பொழுது-அங்குள்ள சித்தர் மகான் ஸ்ரீ சித்தானந்த
சுவாமி மேல் ஒரு பாடல் இயற்றியுள்ளார்;-
-இஞ்ஞான பூமியின் ஈர்ப்பால்
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியாரும்
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா,
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
(1 பாரதி அறுபத்தாறு) எனத் தம்மைச் சித்தராகக்
கூறிக் கொள்கிறார்.

பாரதத்தின் பல திசைகளிலிருந்து ரிஷிகளையும்,
ஞானிகளையும் தவச்செல்வர்களையும்,சித்தர்களையும்,
தெய்வ நினைப்பில் ஆனந்த களிப்பு எய்தியவர்களையும்,
யோகிகளையும் ஈர்க்கும் சக்தி இப்புனித பூமிக்கு உண்டு.
மேலும் ,இலங்கை,பிரான்ஸ்,போன்ற அயல்
நாடுகளிலிருந்தும் உயர்ந்த மனிதர்கள் புதுச்சேரியை
நாடி வந்திருக்கின்றனர்.அவர்களின் பலவித ஆத்மானு
அனுபவங்களுக்கு புதுச்சேரியே சரியான இடம் என்று
முடிவு எடுத்ததற்கு இப்புதுவையின் ஈர்ப்பு சக்தியே காரணம்.
சத்தியத்தின் நிலைகளை காணவும் தெய்வத்தினை
நோக்கிச்செல்லும் பாதையை அடையவும் இப்புதுச்சேரி
பெரியோர்க்கு உதவி வந்திருக்கின்றது.

ஸ்ரீ அரவிந்தர்,ஸ்ரீ அன்னை இருவரும் ஒருங்கே செய்த
முயற்சியால் இன்று புதுச்சேரி -உலகெங்கும் பிரசித்தி
பெற்ற ஒரு ஆன்மீக தலமாக விளங்குகிறது.


|


தெரிந்தது கொஞ்சம்-தெரியாதது அதிகம்
தெரிந்ததை பகிர்ந்து கொண்டு-
தெரியாததை தெரிந்து கொள்ள ஆசை.
-அடியேன்.


கற்றது கையளவு
கல்லாதது உலகளவு.
உலாவியில் படித்தது கொஞ்சம்- இன்னும்
- படிக்க வேண்டுகிறது நெஞ்சம்.
எழுதினால் படிப்பேன்
படிப்பதை பகிர்வேன்
பகிர்ந்ததை * படிக்க வேண்டும்
படித்தபடி * போற்ற வேண்டும்
சித்தரருள் பெற வேண்டும்
ஈசன் என்றும் துணையிருப்பான்.

ஓம் நமச்சிவாய

( * -நீங்களும் )பழைய புத்தகங்களை தேடிப் பிடித்து படித்தும்,
சிவசிந்தனையாளர்களின் சொற்பொழிவுகளைக்
கேட்டு அறிந்தும்,இணையத்தில் உலாவியதிலும்-
கிடைத்த அரிய செய்திகளை தொகுத்து-இந்த
ஞான பூமியில் வழங்கியுள்ளேன்.

அன்பர்கள் படித்து இன்புற்று-சித்தர் பாதங்களை போற்றி-
அவர்களின் ஜீவசமாதிகளை தொழுது-வாழ்வில் எல்லா
நலனும் பெற்று உய்ய விழைகிறேன்.

படித்து இன்புற்றால் வாழ்விலே இன்பம்
எந்நாளும் துன்பம் இல்லை.

மேலும் புதுவை சித்தர்களைப் பற்றி அதிக
செய்திகளை தந்து உதவினால்,அடுத்த இடுகையில்
நீக்கவோ,சேர்க்கவோ செய்து இன்னும் சிறப்பானதாக
செய்து-பல அன்பர்களும் பயன் பெற முயற்சிப்பேன்.

புதுவையிலிருந்து தோன்றிய,முதல் பதிப்பான
இம்முயற்சி வெற்றி பெற-புதுவை ஆத்ம ஞானிகளின்
அரிய தகவல்களை மேலும் மேலும் திரட்டி
வெளிகொணர -அன்பர்களும் தங்களால்
இயன்ற தகவல்களை தந்து உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஆத்மீக அன்பர்களே, தாங்கள் அறிந்த இன்ன பிற சித்தர்களின்
அரிய தகவல்களை இப்பளாக்கில் இணைத்து சிறப்பிக்குமாறு
வேண்டிக்கொள்கிறேன்.

சித்தர்களைப் பற்றி படித்துணர்வதின் மூலம்,அன்பர்கள்
தங்களுக்குள் இருக்கும் பேரமைதியை வெளிகொணர்ந்து
ஆனந்த அமைதியோடு பிரகாசிக்கவேண்டும்.

இறைவன் திருவடிகளை சதா நினைந்து இறையுணர்வு பெற்று
இறையருளின் மூலம் சச்சிதானந்தப் பெருநிலையை
இதை படிப்பதின் மூலம் பெற வேண்டும்.

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
-திருமந்திரம்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ ஆன்ம நேய ஒருமை
பாட்டையும், ஆனந்த அமைதியையும் இப்பிரபஞ்சங்கள்
மூலம் பரவ அன்பர்கள் பணி செய்வார்கள் என்று
நம்புகிறோம்.

எல்லா உயிரும் இன்புற்றிருப்பதுவேயல்லாமல்
யாமொன்றும் அறியேன் பராபரமே.

தகவல் கொடுத்து உதவி புரிந்த எல்லா நல் இதயங்களுக்கும்
நன்றி.
ஞானபூமியின் சித்தர்களின் சிறப்பை தொகுத்து
வழங்க-ஊக்கத்தையும் முயற்சியையும்,உற்சாகத்தையும்
அளித்து வரும்,அனைத்து சித்தர் பெருமக்களின்
பொற்பாதங்களுக்கு என் நன்றியையும்
வணக்கத்தையும் சமர்ப்பித்து கொள்கிறேன்.

அனைத்தையும் படைத்த இப்பிரபஞ்ச நாயகன் -
சர்வேஸ்வரனுக்கு
எம்மையே அர்ப்பணித்து மகிழ்வோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
காவாய் கனகத்திரளே போற்றி
கைலை மலையானே போற்றி போற்றி


திருசிற்றம்பலம்
|

மனிதனுக்கு அவனது உடம்பைக் கொண்டு
செய்ய வேண்டிய ஞானச் செயலைக் கற்பிக்கும்
அனுபவப் பேரறிவுப் பெருநூல் சித்தர் இலக்கியம்.
அவ்விலக்கியங்கள் அறக்கருத்துக்களை வலியுறுத்தும்
என்றும் மனமாசின்றிக் காக்கவும் தீமைகளை நீக்கி
நன்மைகளைச் செய்யவும் பல அறச் செய்திகளைக்
கூறுகின்றன என்றும் மனிதனை மனிதனாக்குவதற்கு
வேண்டிய மனப் பயிற்சி தந்து அவனை மனிதனாக்கிப்
பின் வானவராக உயர்த்தும் உயய நோக்கங்கள் கொண்டவை.


எட்டுநாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்;
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்;
கட்டுக் கடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்;
கருவிடந் தன்னைக் கக்கி ஆடு பாம்பே;
மூண்டெயும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம்;
முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்;
தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்;
தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே;
செப்பய மூன்றுலகும் செம்பொன் ஆக்குவோம்;
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்;
இப்பெய உலகத்தை இல்லாமற் செய்வோம்;
எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே;

''கல்லையும் உருக்கலாம் நார் உத்திடலாம்
கனிந்த கனியாகச் செய்யலாம்;
கடுவிட முண்ணலாம் அமுதாக்கலாம் கொடுங்
கரடி, புலி, சிங்கம் முதலா
வெல்லு மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி
வித்தையும் கற்பிக்கலாம்;
மிக்க வாழைத்தண்டை விறகாக்கலாம் மணலை
மேவு தேர் வடமாக்கலாம்;"

இராமலிங்க அடிகாளர் தெவித்துள்ள மரணமிலாப்
பெருவாழ்வு சித்தர்கள் கூறிய நெறியேயாகும்.
இவர்கள் ஊழையும் வெல்லலாம் என்பதற்கான
வழி முறைகளைத் தம் பாடல்களில் இயம்பியுள்ளனர்.


.

|

சித்தர் என்ற வார்த்தை சித்தியில் இருந்து வந்தது.
ஆன்மீகத்திலும்,அறிவியல் சாதனைகளிலும்
முழுமை பெற்ற நிலை தான் சித்தி.சித்தி பெற்றவர் சித்தர்.
“தத்துவங்கள் முப்பத்து ஆறும் தாண்டியவர்கள் சித்தர்”
என்பார் திருமூலர்.

சித்தர்களை “அறிவன்” என்றும் “நிறைமொழி மாந்தர்”
என்றும் குறிப்பிடும் தொல்காப்பியம்.

”அவிர்சடை முனிவர்”என்கிறது புறநானூறு.

அழியக்கூடிய உடம்பின் அசுத்தமான மூலகங்களை
இரசவாதத்தின் மூலம் தூய்மைப்படுத்திக் கொண்டவர்கள்
-சித்தர்கள்.பொருளை சக்தியாக்குகிற வித்தை.
அதன் மூலம் சுத்த தேகம் பெற்றனர். மீண்டும்
அதனை மாற்றி பிரணவ தேகம் ஆக்கினர்.
அதனுடைய அடுத்த கட்டம் உருமாற்றும் ஞான வடிவு.

சித்தர்களின் தேகம் நுட்பத்திலும் அதி நுட்பம்,
கடினத்துவத்திலும் அப்படித்தான்.அவர்கள் தங்கள்
மனம் போல் உருமாறுவர். நோய்களூக்கும்
மரணத்திற்கும் அப்பாற்பட்டது அவர்களுடைய
அமைப்பு.மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு.

சித்தர்களிடம் அனுபவம்,ஆற்றல் எல்லாவற்றுக்கும்
மேலாக இறையருள் இருந்தது.உயர்ந்த சிந்தனை
உடையவர்கள் அவர்கள்.எளிய வாழ்க்கை முறை அவர்களுடையது.அதனால்தான் அவர்களூடைய வாக்கு
பலித்தது.காரிய சித்தியில் அவர்களால் பெரும் புகழ்
பெற முடிந்தது.

சித்தர்களின் வலிமை தூய்மையின் வலிமை.
அவர்களின் மன உறுதி ஒருமுகப்பட்டது.
வார்த்தைகள் சக்தி மிக்கவை.சித்தர்கள் இன்றும்
நம்மிடையே இல்லாமல் இல்லை.நாம்தான் அவர்களை
புரிந்து கொள்ள தவறி விடுகிறோம். பார்த்தால
பிச்சைகாரர்கள் போலவும் பித்தர்கள் போலவும்
தோற்றமளித்தாலும்-அவர்கள் தேகத்தில் தனி தேஜஸ்
கண்களில் சக்தி(காந்தம்) ஒளி தெரியும்.
தேகத்தில் நறுமண வாடை மிதக்கும்.அவர்களை
உணர்ந்து கொள்ள இறையருள் வேண்டும்.
அவர்களை தரிசிக்கவும்,உணரவும்
பாக்கியம் செய்திருந்தால் தான் அது வாய்க்கும்.
|

யோகம்
யோகங்களை ரிஷிகள் 4 வகைகளாக பிரித்துள்ளனர்.
பக்தி யோகம்;-பக்தியின் மூலம் இறைவனை அடைதல்.
கர்ம யோகம்;-எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் தனக்குரிய
கடமையைச் செய்யும் மார்க்கம்.
ராஜ யோகம்;-ஜீவனின் ஞானமானது எல்லையற்ற ஆனந்த
மயமான நிலையில் நிலை கொள்ளச் செய்யும் சமாதி நிலை
அடைதல்.
ஞான யோகம்;-சத்தியத்தை சித்தாந்த ரீதியாக அலசி ஆராய்தலின்
மூலம் தத்துவத்தின் எதிர்நிற்றல் ஞான்யோகம்.
|

சரியை:--உருவத்திருமேனியை வழிபடுதல்.
கோவில் கட்டி,விக்ரகம் அமைத்து,உழவாரப்பணி
செய்து,விழா எடுத்து இறைவனை வேண்டி அருள் பெறுதல்.
தாஸமார்க்கம் என்றும் சொல்வார்கள்.
எஜமானனிடம் வேலைக்காரன் வணங்கி
நின்று தயவு பெறுவது போல.
இறைவனை தலைவனாக கொண்டு அடிமையாய்
தொண்டு செய்தல்.

கிரியை :--அருவத்திருமேனியை வழிபடுதல்.
கடவுளை லிங்கங்களிலும்,பிம்பங்களிலும்,
கும்பங்களிலும் கண்டு நித்திய பூஜை
வழிபாடுகளை 16 வகை உபசாரங்களுடன்
செய்து அருள் பெறுதல்.
ஸத்புத்திர மார்க்கம் என்றும் சொல்வார்கள்.
தந்தையிடம் மகன் உரிமையோடு தொட்டு
பேசி பழகி அருள் பெறுதல் போன்று.
இறைவனை தந்தையாக கொண்டு
உரிமையோடு தொண்டு செய்தல்.

யோகம்:--அருவுருவத்திருமேனியை வழிபடுதல்.
மூல குண்டலினியை எழுப்பி புருவ மத்தியில்
சுடராக கொழுந்து விட்டெரிய உருகிய
அமிர்தத்தினை உண்டு மகிழ்ந்து,
வேண்டுவன பெறுதலாம்.
ஸஹமார்க்கம் என்றும் சொல்வார்கள்.
தோழனாக உரிமை பாராட்டி மிக நெருங்கி
பழகி அருள் பெறுதல்.
இறைவனை தோழனாக உரிமை பாராட்டி
தொண்டு செய்தல்.

ஞானம்:-- உருவ,அருவ,அருவுருவ மேனிகளை
கடந்து நிற்கும் அகண்டாகார ஜோதிமயமான
கடவுளை நோக்கிச் செய்யும் வழிபாடு.
அறிவை மட்டும் கொண்டு செய்வது.
ஸன்மார்க்கம் என்றும் சொல்வார்கள்.
கணவன் - மனைவி உறவு போல,உடல் வேறானாலும்
உயிர் ஒன்றாய் நின்று இன்பத்தை துய்ப்பது போல்,
இறைவனும் தானும் ஒன்றேயாகி, தன்னுள்ளே
உலகமும்,உலகத்துள்ளே
தானுமாகி, இறையறுள் பெறுதலாம்.
இறைவனை தலைவனாக பாவித்து
போற்றி தொண்டு செய்தல்.


உருவ வழிபாடு;- உருவங்களைக் கொண்ட சிலா ரூபங்கள்,
திரு உருவப்படங்களை வழிபடுதல்.
அருவ வழிபாடு;- உருவமில்லாமல் இறைவனை வழிபடுதல்.
அருவுருவ வழிபாடு;-லிங்கம், கும்பம்-வழிபாடு செய்தல்.

|

சித்தர் இலக்கியம் சீர்திருத்தம் பேசினாலும்

நாத்திகத்தன்மை உடையதன்று. சித்தர்கள்
இறைப்பற்று மிகவும் உடையவர்கள். தவநெறி,
அட்டாங்கயோகம் முதலியவை கடினமாகத்
தோன்றினாலும் அவர்கள் எடுத்துரைக்கும் நெறி
சிறந்ததாகும்.
என்னும் நான்கு நெறியினையும் சித்தர்கள் பின்பற்றியுள்ளனர்.
சமயப்பொது நோக்கு, சாதி வேறுபாடின்மை. மூடப் பழக்க
வழக்கங்களைச் சாடுதல் முதலானவை அவர்தம்
பாடல்களில் காணப்பெறும் சீர்திருத்தங்களாகும்.

கோயிலாவது ஏதுடா? குளங்களாவது ஏதுடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை, இல்லை இல்லையே
(சிவவாக்கியர், 34)

சித்தர்கள் முறையான மத சடங்குகளை மேற்
கொள்ள மாட்டார்கள்.அவர்களுடைய கிரியைகளும்,
மந்திரங்களும் யோக நெறியோடு நிற்பவை.
மத சடங்குகளில் தேவையற்ற சடங்குகளை மட்டுமே
அவர்கள் எதிர்த்தார்கள்....

’’ நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”
...சிவவாக்கியார்.

”ஓசை உள்ள கல்லைநீர் உடைத்து இரண்டாய் செய்துமே
வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்த கல்லில் பூவை நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்த கல் எந்த கல்லு சொல்லுமே “
.....சிவவாக்கியார்


சித்தர்கள் வெளியில் சென்று கோயில் வழிபாடு
செய்ய விரும்புவதில்லை. புறச் சடங்குகளையும்
அவர்கள் ஏற்பதில்லை. மனக் கோயில் வழிபாடே
அவர்கட்கு முதன்மையானதாகும். யோகமுறை,
மூச்சடக்கிப் பயிற்சி செய்தல் ஆகியவற்றையே
முக்கியமாக கொண்டார்கள்.

மானசீக வழிபாட்டு முறை இவர்களுடையது.
இவர்கள் தங்களுடைய நெறி உயர்ந்தது என்றோ,
மற்றைய நெறிகள் தவிர்க்க படவேண்டியன என்றோ
கூறியதில்லை.சித்தரின் கண்கள் எல்லோரையும்
சமமாகவே பாவிக்கும்.

சித்தர்கள் எல்லா மதங்களிலும் உண்டு.ஆனால்
அவர்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவே
விளங்கினார்கள்.

|

சித்தர்களை ஆன்மீக புரட்சியாளர்கள் என்று
கூறுவதுண்டு.சித்தர்களின் காலம் கி.பி.14-17ம்
நூற்றாண்டின் இடைப்பட்ட காலம். அகத்தியர்,
பின்பு திருமூலர்,பிறகு மற்றவர் என சித்தர் மரபு
அறியப்படுகிறது.
ஆன்மீகம் தழைக்கவும் ,மக்களின் ஆரோக்கியம்
செழிக்கவும் சித்தர்கள்மிகவும் பாடுபட்டுள்ளனர்.
சித்தர்கள் கடவுள் நிலை பெற்றவர்கள்.
கடவுளுக்கு சமமாய் போற்றி வணங்கபட்டனர்.
சித்தர் வழிபாட்டை முதலில் கொண்டு வந்தது
சமணர்கள் தான்.பிறகே மற்றவர்களும் கைக்கொண்டனர்.

பௌத்த மதத்தின் ஒரு பிரிவான மந்திராயனத்தின்
பிறப்பிடம் ஆந்திராவில் உள்ள ஸ்ரீபர்வதம்.
சித்தர்கள் பலரும் ஸ்ரீபர்வதத்தோடு தொடர்பு கொண்டிருந்தனர்.
பௌத்த மத சித்தர்கள் 6-12-ம் நூற்றாண்டுகளில்
வாழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
தமிழ் நாட்டைப்போலவே வடநாட்டிலும்
சித்தர்கள் இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் நவநாத சித்தர்கள் எனப்படுவார்கள்.
அவர்கள்; 1.சத்திய நாதர், 2.சதோக நாதர், 3.ஆதிநாதர்,
4.வெகுளி நாதர், 5.மதங்கநாதர், 6.மச்சேந்திர நாதர்,
7.கடேந்திர நாதர், 8.அநாதி நாதர், 9.கோரக்க நாதர்.
ஆகியோர்.
சித்தர்கள் உடம்பை வளர்த்து உயிரை வளர்க்கும்
உபாயம் அறிந்தவர்கள். சாகாக்கலை அறிந்தவர்கள்.
இறைவனுடன் இரண்டறக் கலப்பதையே அவர்களின்
நோக்கமாக கருதினார்கள்.அவர்களுக்கு காணும்
இடமெல்லாம் இறைவனின் தோற்றம்.
சித்தர்கள் நிலையாக ஒரு இடத்தில் இருப்பது
கிடையாது.உலகெங்கும் யாத்திரை செய்வார்கள்.
மக்களுக்கு நன்மை செய்வதே அவர்களது பயண
நோக்கம்.அவர்களை நடமாடும் தெய்வம் எனலாம்.
நோய்,முதுமை காரணமாக இயலாமை வந்துற்ற
மக்களின் இருப்பிடம் தேடிச்சென்று நன்மை செய்யும்
பரந்த மனப்பான்மை உடையவர்கள்.சித்தர்கள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை.
ஓரிடத்தில் கடமை முடிந்ததாக இறைவனின்
உத்திரவு வந்தால்-வேறிடம் செல்வர்.உருமாறும்
கலை அறிந்தவர்கள் அவர்கள்.நினைத்த வடிவை
எடுத்து நினைத்த இடத்திற்கு கனப்பொழுதில்
செல்வர்.சித்தர்கள் எந்த காலத்திலும் தோன்றுவர்-
எந்த நாட்டிலும் தோன்றுவர்.இன்ன காலத்தில்
இன்ன நாட்டில் என்ற நியதிகள் இல்லை.

சித்தர்களுக்கு குளிர் இல்லை,வெயில் இல்லை,
பசி இல்லை,தூக்கம் இல்லை-தமெக்கென வாழும்
எண்ணமும் அவர்களுக்கு இல்லை.பெண்,பொருள்-மோகம்
அற்றவர்கள்.இறைவன் அருளிருந்தால்,
திடச்சிந்தனையிருந்தால், இரும்பையும்
பொன்னாக்கலாம் என்று நிரூபித்தவர்கள்-சித்தர்கள்.
அவர்கள் தங்களுடைய அருள் வல்லமையை
பெருக்கிக்கொள்ள அநேக உத்திகளை கையாளுவார்கள்.
தன்னை சோதனைக்கு ஆட்படுத்திக்கொள்ளுதல்,
தனக்கு தானே இன்னலை எற்படுத்திக்கொண்டு தனது
ஆன்மாவை தூய்மைப்படுத்திக்கொள்ளுதல் போன்ற
உத்திகள் குறிப்பிடத்தகுந்தவை.

ஜீவசமாதிகள்

|புதுவையில் சித்தர்களின் ஜீவசமாதி அமைவிடங்கள்


1. ஸ்ரீ சித்தானந்தா சுவாமிகள்:-கருவடிகுப்பம் (முத்தியால்பேட்டை-
லாஸ்பேட்டை போகும் வழியில்)
2. ஸ்ரீ தொள்ளைக்காது சுவாமிகள்:-ஸ்ரீ மணக்குள விநாயகர் ஆலயம்.
3. ஸ்ரீ அக்கா பரதேசி சுவாமிகள்:-வாழைக்குளம்-வைத்திக்குப்பம்
போகும் வழியில்.
4. ஸ்ரீ நாராயண பரதேசி சுவாமிகள்:-ஸ்ரீ அக்காமடம் சாமி கோவிலினுள்.
5. ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகள்:-தட்டாஞ்சாவடி
தொழிற்பேட்டை பின்புறம்-வடக்கில்.
6. ஸ்ரீ பெரியவர்க்கு பெரியவர்:-ஸ்ரீ கம்பளி சாமி மடத்தினுள்.
7. ஸ்ரீ யாழ்ப்பானம் கதிர்வேல் சுவாமிகள்:-பிருந்தாவனம்
3வது தெரு-சித்தன்குடி அருகில்.
8. ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள்:-திருவள்ளூவர் பஸ்நிலையம்
பின்புறம் தென்னஞ்சாலை வீதியில்
-கோவிந்தசாமி தோட்டத்தில் உள்ளது.
9. ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்:-அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட்
தாண்டி மின் துறை எதிரில்.
10. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்:-வில்லியனூர் பைபாஸ் அருகில்.
11. ஸ்ரீ தட்ஷிணாமூர்த்தி சுவாமிகள்:-பள்ளிதென்னல்,ஐயனார்
கோவில் பின்புறம் உள்ளது.
12. ஸ்ரீ குருசாமி அம்மாள்:-அரியூர் சர்க்கரை ஆலை
தாண்டியவுடன் உள்ளது.
13. ஸ்ரீ மகான் படே சாஹிப் சுவாமிகள்:-கண்டமங்களம் ரயில்வே
கேட்டில் வலது புறம் திரும்பினால்
2.5கி.மீ தொலைவில் உள்ளது.
14. ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்:-ஏம்பலம்(நல்லாத்தூர்-சிவன் கோவில்)
அருகில் உள்ளது ..வில்லியனூரிலிருந்து
8 கி மீ தொலைவு.
15. ஸ்ரீ அம்பலத்தாடப்பர் சுவாமிகள்:-
16. ஸ்ரீ அழகர் சுவாமிகள். (சாம்பசிவ சுவாமிகள்):-
தென்னம்பாக்கம்(ஏம்பலம்)
ஸ்ரீ ஐயனார் கோவில் அருகில் உள்ளது.
17. ஸ்ரீ வண்ணாரப் பரதேசி சுவாமிகள்:
-ஒதியம்பட்டு-வில்லியனூர் சாலையில் உள்ளது.
18. ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமிகள்:-AFT மில் பின்புறம்,
காராமணிகுப்பம் ரயில்வே கேட்
அருகில் உள்ளது.
19. ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகள்:-ரயில் நிலையம் அருகில்,
முல்லா வீதியில் உள்ளது.
20. ஸ்ரீ சடையப்பர் சுவாமிகள்:-முத்திரையர்பாளையம்,
ராணி மருத்துவமணை
அருகில் 2 வது தெருவில் உள்ளது.
21. ஸ்ரீ சுப்ரமணிய அபிரதா சச்சிதானந்த பாரதி சுவாமிகள்:
-எல்லைபிள்ளை சாவடி
ஸ்ரீ சாராதாம்பாள் கோவிலில் உள்ளது.
22. ஸ்ரீ லஷ்மண சுவாமிகள்:-புத்துப்பட்டு ஐயனார்
கோவில் பின்புறம் 300மீ தொலைவில்
ஓடைக்கு அருகில் உள்ளது.
23. ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள்:-அம்பலத்தாடையார்
தெருவில்,காந்தி வீதி-பாரதி
வீதி இடையில் உள்ளது.
24. ஸ்ரீ அரவிந்தர்:-அகத்தியர் தவம் செய்த இடமான
செட்டி தெருவில்( ஸ்ரீ மணக்குள
விநாயகர் கோயில் அருகில்) உள்ளது.
25. ஸ்ரீ அன்னை:-ஸ்ரீ அரவிந்தர் சமாதி அருகில்.
26. ஸ்ரீ பவளக்குடி சித்தர்.(பவழங்கு சித்தர்):-
சோம்பட்டு(மண்ணாடிபட்டு) கிராமம்.
27. ஸ்ரீ வேதாந்த சுவாமிகள்:-அம்பிகா தியேட்டர்-
கருவடிகுப்பம் போகும்
சாலையில் -வசந்த் நகரில் உள்ளது.
28. ஸ்ரீ கோவிந்த சுவாமிகள்:-
29. ஸ்ரீ சட்டி சுவாமிகள்:-கதிர்காமம்.
30. ஸ்ரீ சந்தானந்த சுவாமிகள்:-எல்லைப்பிள்ளை சாவடி,
சிருங்கேரி மடம்(சேரத்தோப்பு எதிரில்)
31.ஸ்ரீ கணபதி சுவாமிகள்:-கருவடிகுப்பம்,இடையன்சாவடி
போகும் பாதையில்
--(விமான தளம் பின்புறம்) கடைசியில் உள்ளது.
32. ஸ்ரீ வியோமா சுவாமிகள்.(திருக்காஞ்சி சாமியார்):-
கணுவாப்பேட்டை(வில்லியனூர்).
33. ஸ்ரீலஸ்ரீ அருள் சக்தி அன்னையின் சித்தர் பீடம்:-
(ஸ்ரீ ரெட்டியப்பட்டி சுவாமிகள் சீடர் ) பிள்ளையார்குப்பம்(கிருமாம்பாக்கம்)
34. ஸ்ரீ ஞானகுரு குள்ளச்சாமிகள்:-சித்தர்கள்-புதுவைக்கு அருகில் உள்ள ஊர்களில்.

1. ஸ்ரீ சிவஞான பாலைய சுவாமிகள்:-பொம்மையார்பாளையம்
2. ஸ்ரீ சிவஞான பால சித்தர்:-மைலம் முருகர் கோவிலில்.
3. ஸ்ரீ கழுவெளி சித்தர்.(குண்டலினி சித்தர்):-திருசிற்றம்பலம் கூட்டு ரோட்டிலிருந்து
-இடையன்சாவடி போகும் வழியில்,இரும்பை மாகாளத்தில் உள்ளது.
4. ஸ்ரீ தேவராசு சுவாமிகள்:-சூணாம்பேட்டிலிருந்து 8 கி மீ தொலைவில்
உள்ள வன்னிய நல்லூரில் உள்ளது.
5. ஸ்ரீ பகவந்த சுவாமிகள்:-கடலூர்,புதுபாளையம் கடைத்தெரு அருகில்.
6. ஸ்ரீ தயானந்த சுவாமிகள்:-ஸ்ரீ பகவந்த சுவாமிகள் சமாதிக்கு பின்புறம்.
8. ஸ்ரீ சற்குரு நித்யானந்த சுவாமிகள்:-பட்டாம்பாக்கம்-(அண்ணா கிராமம்) அருகில்
கோழிபாக்கம்.
9. ஸ்ரீ சுப்ராய பரதேசி சுவாமிகள்:-மைலம்(மூலவர் இருக்கும் இடத்தில்).
10. ஸ்ரீ ரஙகசாமி சித்தர் சுவாமிகள்:-சோம்பட்டு (திருக்கனூர் வழி).
11. ஸ்ரீ அப்பர் சுவாமிகள்:-ஏம்பலம்.
12. ஸ்ரீ உலகநாத களரானந்த சுவாமிகள்:-சோரியாங்குப்பம் பள்ளி (பாகூர்).
13. ஸ்ரீ காந்தசாமி சுவாமிகள்:-காரணப்பட்டு.

சித்தர்கள் வரலாறு

|சித்தர்கள்-புதுவை
சித்தர்கள்-புதுவைக்கு அருகில் உள்ள ஊர்களில்.

4. ஸ்ரீ தேவராசு சுவாமிகள்.
5. ஸ்ரீ பகவந்த சுவாமிகள்.
6. ஸ்ரீ சந்தானந்த சுவாமிகள்
7. ஸ்ரீ தயானந்த சுவாமிகள்.
8. ஸ்ரீ சற்குரு நித்யானந்த சுவாமிகள்.
9. ஸ்ரீ சுப்ராய பரதேசி சுவாமிகள்.
10. ஸ்ரீ ரஙகசாமி சித்தர் சுவாமிகள்.
11. ஸ்ரீ அப்பர் சுவாமிகள்.
12. ஸ்ரீ உலகநாத களரானந்த சுவாமிகள்.
13. ஸ்ரீ காந்தசாமி சுவாமிகள்.

சிவபுராணம்

|

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்
சித்தர்கள்

|

சித்தர்கள் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான
அடிப்படை நெறிகளையே எடுத்துக்கூறியுள்ளனர்.
சாத்திரக் குப்பையிலும் கோத்திரச் சண்டையிலும்
ஈடுபடாமல், மக்களை நன்னெறிப்படுத்த முயன்ற
வடநாட்டு நவநாத சித்தர்களைப் போலத் தமிழகச்
சித்தர்களும் சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி
மக்களுக்கு நல்வழி காட்டியுள்ளனர்.

சித்தர்களைப்பற்றி பலரும் பலவிதமாக
கற்பிதம் செய்து கொள்கிறார்கள்.சிலர் அவர்களை
பரதேசி என்றும்,பைத்தியக்காரர்கள் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள்.அவர்களுடைய செயல்
யாராலும் புரிந்து கொள்ள முடியாத புதிர் என்றும்,
சித்து விளையாடல் செய்யும் மந்திரக்காரர்கள் என்றும்,
சாஸ்திர சடங்குகளை எதிர்ப்பவர்கள் என்றும்,
பொது மக்களோடு இணைந்து வாழாதவர்கள்-
சுயநலவிரும்பிகள் என்றும் தவறானஅர்த்தத்தை
புரிந்து கொள்கிறார்கள். நம்மில் பலர்,சித்தர்களைப்
பற்றிய உண்மைகளை முழுதும் சரியாக புரிந்து
கொள்ளாததோடு-சில கருத்துகளை தவறாகவும் புரிந்து
வைத்துக்கொண்டுள்ளனர்.ஞானபாதையை
பிறருக்குப்புலப்படுத்தாதவர்கள் என்றும் மூலிகை
ரகஸியங்களை தமக்குள்ளேயே புதைத்து கொண்டு
விட்டவர்கள் என்றும் புரிந்து கொண்டுள்ளனர்.

தன்னுடைய சுய தேவைகளூக்காக கடவுளை
வழிபடுகிறவன்=ஓரு சாதாரண மனிதன்.

இறை சிந்தனையோடு-கடவுளை மகிழ்விப்பதற்க்காக-
பூஜை புனஸ்காரங்கள் செய்து,தன்னை மகிழ்வித்து
கொள்பவன்=ஒரு பக்தன்.

ஆனால் ஒரு சித்தனோ-சிந்தையை அடக்கி
சதா சர்வ காலமும் சிவத்திலேயே லயித்திருப்பவன்.

இயற்கை பஞ்ச பூத செயல்பாடுகளின் ரகஸியங்களை,
யதார்த்தங்களை உணர்ந்து-அவற்றின் பேதா பேதங்களை கண்டறிந்து,பேதங்களை நீக்கி குணங்களை மட்டும்
சாதனமாக கொண்டு இறையருளின் ஆனந்த நிலையை
வசப்படுத்தி,சாவை வென்று-அவன் ஜோதியில்
ஐக்கியமாயிருப்பவன்.

கடவுளைக் காண முயற்ச்சிப்பவன் பக்தன்
கண்டு தெளிந்தவன் சித்தன்.

உடம்பையும் உயிரையும் பாரமாக
கொள்வார்கள்-பக்தர்கள்.
உயிரையே சிவனாக பாவித்து-
உடம்பை போற்றுவார்கள்-சித்தர்கள்.

உடம் பார் அழியில் உயிரார் அழிவர்;
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்;
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த் தேனே
(724)

உடம்பினை முன்னம் இழுக்கென றிருந்தேன்;
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்;
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே
(725)

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்;
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்;
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்;
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே;
(1823)
சித்தர்கள்

|

மூச்சினை யடக்கி யோக ஆற்றலினால்
உடலில் உள்ள மூலதாரம், கொப்பூழ்,
இதயம், இரைப்பையின் நடு, கழுத்து, தலைமுடி
என்ற இவ் ஆறு இடங்களிலும் மனத்தை
முறையாக நாட்டிக் குண்டலியை எழுப்பிப் பலபல
அனுபவமும் வெற்றியும் கண்டு. அப்பாலிலுள்ள
எல்லாம் ஆன பொருளில் நிலைத்துச் சித்தி
பெறுபவரே சித்தர்.ஆசாபாசங்களில் உழலவைக்கும்
மும்மலத்தை வென்றவர்கள்.

சித்தத்தை சிவன்பால் உறைய வைத்து
சிவனோடு ஐக்கியமானவர்கள்.
ஆகம மாகிய இந்த மனித உடம்பிலே
தெய்வப் பக்தி கொண்டு இதனுள் அருட்சக்தியை
வளர்த்து ஆன்ம பணாமத்தில் மக்களிடையே
வானவர்களாகவும், மனித தெய்வங்களாகவும்
உலவி அருவாழ்வு வாழ்ந்து அருளை வழங்கி
வருகின்ற பெரியோர்களே, மகான்களே சித்தர்கள்.

கடவுளரும் சித்தராகக் கருதப்பட்டனர்.
அவர்தம் செயல்களும் சித்துக்களாக மதிக்கப்பட்டன.
பழனியிலுள்ள முருகன் கோயில் சித்தன் வாழ்வு
என அழைக்கப்பெற்றது. எல்லா ஆற்றலும்
பெற்றிருப்பவன் -ஆதலின் முருகனுக்குச் சித்தன்
என்னும் பெயரும் உண்டு. சிவபெருமான் செய்த
அருஞ்செயல்களைத் திருவிளையாடற் புராணம்
சித்துக்களாகக் குறிப்பிடும். 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB