ஸ்ரீ குருசாமி அம்மையார்

|


ஸ்ரீ சடையத்தம்மாள் ( எ )  குருசாமி அம்மையார்




ஓம் ஸ்ரீ சடையத்தாயாரம்மாள் சுவாமிகள்


ஞானபூமியாம்-புதுவையை நாடி வந்த எண்ணற்ற
யோகிகளுல் பெண்சித்தராம் ஸ்ரீ குருசாமி அம்மையாரும்
ஒருவர். இவர் வடமாநிலத்தில் இருந்து புதுவைக்கு
ஆன்ம விடுதலைக்காக வந்திருக்கலாம் என்று
நம்பப்படுகிறது. இறைவனின் அருள் நாடி,
தவத்தில் ஈடுபட பல ஸ்தலங்களுக்கும் சென்று
கடைசியில் புதுவையை வந்தடைந்து-இச்சித்த பூமியே
தான் தேடிய தவச்சாலை என உணர்ந்து இப்புதுவையில்
தங்கி விட்டார். இவருடைய காலம் 1890-களாக
இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

புதுவையிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில்
அரியூர் என்னும் சிற்றூரில் சர்க்கரை ஆலைக்கு
மேற்கில் இவருடைய ஜீவசமாதி அமைந்துள்ளது.


.புதுவையின் சூழலும், அமைதியும் அம்மையாருக்குப்
பிடித்துப் போக.. அரியூரிலுள்ள ஒரு தோட்டத்து
மரத்தடியில் தங்கி விட்டார். பசியைப்
பற்றிக் கவலை கொள்ளாமல், சதாகாலமும்
தியானத்திலேயே இருப்பார். இதை கவனித்த
அப்பகுதி மக்கள் அவருக்கு உணவு கொண்டு வந்து
கொடுத்து அவரை அன்போடு கவனித்துக் கொண்டனர்.
நாளடைவில் அம்மையாரிடம் அருட் சக்தி இருப்பதை
உணர்ந்து அவரை தஞ்சம் அடைந்தனர்..
தங்களுக்குள்ள மனக் குறைகளை அம்மையாரிடம் 
கொட்டுவார்களாம். அவர்களின் குறைகளை எல்லாம் 
புன்னகையுடன் கேட்டுக் கொண்டு, ஆசி புரிந்து அனுப்பி 
வைப்பாராம். அவர்களும் நிம்மதியுடன் வீடு
திரும்புவார்கள் பக்தர்கள்  தங்கள் வியாதிகளை
தெரிவிக்க அதையும் அவர் தீர்த்து வைப்பாராம்.

அம்மையாரின் உண்மைப் பெயர் யாரும்
அறிந்ததில்லை. அவருடைய நீளமான கூந்தலின்
வளர்ச்சி கண்டு அவரை “சடையம்மாள்” என்றும்
”சடையத்தாயாரம்மாள்” என்றும் அன்போடு
கூறுவார்கள்.

குருசாமி அம்மையார் சாதாரணமானவரா..
இறையருள் பெற்றவர் ஆயிற்றே! இவரிடம்
வந்து ஆசி பெற்றுச் சென்றவர்கள் அடுத்து வந்த
சில நாட்களிலேயே தங்களது குறைகள் அகலப்
பெற்றனர். அதன்பின் அம்மையாருக்கு நன்றி
தெரிவிக்கும் பொருட்டு, இவரது இருப்பிடம் தேடி
வணங்கிச் செல்வார்கள். அப்படி வருபவர்களில்
பொருள் வசதி படைத்த சிலர் அம்மையாரின்
தியானமும் அருட்பணியும் தடைபடாமல்
இருப்பதற்காக, போதிய இட வசதியை அவருக்கு
ஏற்படுத்திக் கொடுத்தனர். இன்னும் சிலர்
நிலபுலன்களையும், சில சொத்துக்களையும் அம்மையார் 
பெயருக்கு எழுதிக் கொடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.



சித்த புருஷர்கள் என்றால், அவர்களின் செயல்பாடுகளும் 
வித்தியாசமாக இருக்கும். அதுபோல், குருசாமி
அம்மையாரிடம் ஒரு நடைமுறை இருந்து வந்தது.
அதாவது ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் உடல்
முழுக்கக் காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து
உடல் மேல் பூசிக் கொண்டு, சற்று நேரம்
ஊறிய பிறகு அருகில் உள்ள கிணற்றில் இறங்கிக்
குளிப்பது வழக்கமாம். எப்படி இறங்குவார் என்பது
எவருக்குமே தெரியாதாம். கிணற்றுக்குள் இருக்கும் 
அம்மையாரை எவரும் எட்டிப் பார்க்க கூடாதாம்.
அப்படி ஒரு முறை எட்டிப் பார்த்த பெண்மணி,
அம்மையாரைப் பார்க்கவே முடியவில்லை.
அவரது  நீண்ட தலைமுடி கிணற்றின் நீர்ப் பரப்பு
மேல் படர்ந்து இருந்தது. அவரைக் காணவில்லை
என்று பய உணர்ச்சியுடன் சொல்லி இருக்கிறார்.
அதுபோல் குளித்து முடித்து எப்படி மேலே ஏறி வருகிறார்
என்பதும் எவருக்கும் தெரியாது. தரைக்கு வந்தவுடன் 
அம்மையார் அப்படியும் இப்படியும் திரும்பும்போது
அவரது ஈரமான நீண்ட தலைமுடியில் இருந்து சிதறும்
நீர்த் துளிகள் பலர் மீதும் பட்டுத் தெரிக்கும். அந்த
நீர்த் துளிகள் தங்கள் மேல் படாதா என்கிற ஆர்வத்துடன்
பலரும் அம்மையாரை நெருங்குவார்களாம். நீர்த் துளிகள் 
பட்டால் தங்கள் குடும்பம் சிறக்கும் என்பதற்காகப் 
பலரும் அருகே செல்வதற்குப் போட்டி போடுவார்களாம்
.இன்றும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் குருசாமி 
அம்மையாரின்  உருவச் சிலைக்கு மிளகாய் அரைத்து 
அபிஷேகம் செய்யும் வழிபாடு நடந்து வருகிறது..

மிளகாயை அரைப்பது இந்த மடத்திலேயே செய்ய
வேண்டுமாம். வீட்டில் இருந்து மிளகாயை அரைத்து
எடுத்து வரக்கூடாது. இப்படி அரைத்துக் கொடுத்த
பெண்களின் கைகளே ஜிவுஜிவுவென்று எரியும்.போது
இதை உடலில் பூசிக்கொண்டு சிரித்த
முகத்துடன் அந்தப் பெண்களுக்கு ஆசி
வழங்குவாராம் அம்மையார்.
அம்மையாரின் அபிஷேகத்திற்கு பெண்கள் மிளகாய் 
அரைக்கும்போது  என்ன பிரார்த்தித்தாலும்,
கூடிய விரைவிலேயே அது நடந்துவிடும் என்பது
நம்பிக்கை.
அம்மையார்  ஒரு சித்திரை மாதம் பவுர்ணமி
தினத்தன்று அம்மரத்தடியிலேயே சமாதி அடைந்ததாக
கர்ண பரம்பரை செய்தி சொல்கிறது.

அதன்பிறகு அவரைப் பற்றிய சரியான தகவல்
இல்லை. அச்சமாதியையும் கவனிப்பார் இல்லை.
அந்த இடம் தமிழக-புதுவை எல்லையாக இருந்த
படியால், இரு ராணுவத்தினரும் யாரையும்
அப்பகுதியில் தங்க அனுமதிக்கவில்லை.
அதனால், அம்மையாரின் ஜீவசமாதியையும்
யாரும் பராமரிக்க இயலாமல் போனது.



சில ஆண்டுகளுக்கு பின், நடராஜ சுவாமிகள்
என்னும் அடியார் தஞ்சாவூரிலிருந்து
திருத்தல யாத்திரையாக புதுவை வந்தார்.
 புதுவையில் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளின்
ஜீவசமாதி அமைந்துள்ள கோவிலில்
அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.
அவரின் ஆழ்ந்த தியானத்தின் பலனாக
ஒரு குரல் அவரை குருசாமி அம்மையாரின்
ஜீவசமாதி இடத்திற்கு சென்று பணி
செய்யுமாறு பணித்தது.
ஐயனின் கட்டளையை சிரமேற் கொண்டு
அரியூருக்கு விரைந்தார். அம்மையார் வாழ்ந்த
தோட்டம் முழுதும் புதர் மண்டிப் போய் கிடந்தது.
அப்புதரினுள் அம்மையாரின் சமாதியை தேடி
கண்டு பிடிப்பது மிகவும் சிரமமாய் இருந்தது.
அம்மையாரை நினைவில் இருத்தி தியானத்தில்
ஆழ்ந்தார். அம்மையாரும் நடராஜ சுவாமிகளுக்கு
காட்சி கொடுத்து தன் இருப்பிடத்தை உணர்த்தி
மறைந்தார்கள்.
நடராஜ சுவாமிகள் குருசாமி அம்மையாரின்
ஜீவசமாதியை வெளிக்கொணர்ந்து இவ்வுலகுக்கு
அறிவித்தார். தன் கடன் இனி அம்மையாருக்கு
பணி செய்து கிடப்பதே எனத் தெளிந்து, பணி
செய்து வரலானார். அம்மையாருக்கு அக்காலத்தில்
பொதுமக்கள் கொடுத்த சொத்துக்களை மிகவும்
சிரமப்பட்டு தேடிக் கண்டு பிடித்து- அவற்றைக்
கொண்டு கல்வி, அன்னதானம், தினசரி வழிபாட்டுச்
செலவுகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.
1970-ம் ஆண்டு நடராஜ சுவாமிகள் காலமானார்.
அவருக்குப் பின் அத்திருக்கோவிலை தமது
சீடரான சீதாராமை கொண்டு நடத்தி வர
பணித்தார்.



 இந்த இரு அடியார்களின் சமாதிகளும் குருசாமி
அம்மையாரின் சமாதிக்கு அருகிலேயே வைக்கப்பட்டது.
அம்மையாரின் சமாதிக்கு அருகில் அந்தப் புனிதக்
கிணறு இன்று பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.

குருசாமி அம்மையாரின் குருபூஜை தினம் சித்திரை
மாதம் பவுர்ணமியன்று மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது.







 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB