சுவாமிகள் ஆற்காடு என்னும் ஊரில் பிறந்ததாக சொல்லப்படுகிறது.
தாய், தந்தை பெயர் தெரியவில்லை.வணிகக்குடும்பத்தில் பிறந்த
இவர் மிகவும் செல்வச்சிறப்புடன் வாழ்ந்து வந்தார்.
இறை உணர்வினால் ஆளப்பட்டு,செல்வத்தை சிறிதும் மதியாமல்
எல்லோருக்கும் தம் செல்வத்தை வாரி வழங்கினார்.
பகலெல்லாம் நோன்பு நோற்றுக் கொண்டும், இரவில் இறைவனை
உள் நிலையில் வணங்கிக் கொண்டுமிருப்பதையே தம் தொழிலாக
கொண்டிருந்தார்.தாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு
அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி கொண்டார்.
உயர்ந்த பெரியோர், சிறந்த சான்றோர், இறைவன் ஒருவனையே
நினைத்திருந்த ஆத்ம ஞானி.
அப்பொழுதிருந்த சுல்தானிடம் தொடர்பு கொண்டதில் இந்துவிலிருந்து
முஸ்லீம் மதத்திற்கு மாறினார். மௌலா என்ற உருது சொல்லிற்கு
பொருள்-பிற மதத்திலிருந்து முஸ்லீம் மதத்திற்கு வந்தவர் என்பதாகும்.
ஒரு முறை, ஒரு முஸ்லீம் பெரியவரோடு மெக்கா யாத்திரைக்கு
சென்று வந்தார். பல சீடர்கள் இவரிடம் இருந்ததாக சொல்லப்படுகின்றது.
ஒரு நாள் எல்லாவற்றையும் விட்டு விட்டு புதுவைக்கு வந்து சேர்ந்தார்.
சதா சர்வ காலமும் இறைநினைவிலேயே வாழ்ந்து வந்தார். புதுவை
லால் பகதூர் ஸாஸ்திரி வீதிக்கு அருகில் இறைப் பிரச்சாரம்
செய்து வந்து, பின் அங்கேயே சமாதி ஆனார் என்று சொல்லப்படுகிறது.
மற்றுமொரு கதையோ ;-
சுவாமிகள் உடலமைந்த பெட்டி வங்கக் கடலில் அப்படியே மிதந்து
வந்தது,மீனவர்களால் பெட்டியை எடுக்க முடியவில்லை.மிதந்து வந்த
பெட்டி -புதுவை கடற்பகுதிக்கு வந்து சேர்ந்தது. முஸ்லீம் பெரியவர்கள்
அப்பெட்டியை மீட்டு- திறந்து பார்த்தார்கள்,.அப்பெட்டி முஸ்லீம் மதப்படி
அமைக்கப்பட்டிருந்தது. அதை அப்படியே அடக்கம் செய்தார்கள்.
தற்போது 7-ம் திருச்சபை( 7th day Adventist church) இருக்கக் கூடிய
இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
பிரஞ்சுக்காரர்களின் குடியேற்றம் பெருகப் பெருக அப்பகுதியில்
வாழ்ந்த முஸ்லீம் பெருமக்கள் தற்பொழுது வாழ்ந்து வரும் பகுதிக்கு
குடி பெயர்ந்தார்கள். ஆனால் சுவாமிகளின் சமாதியை அப்படியே
விட்டு விட்டு வந்து விட்டனர். அவ்விடத்தில் பொதுமக்கள்
அசூசை செய்து வந்ததால் முஸ்லீம் மக்கள் மிகவும்
கவலைகொண்டனர். ஆனால் செய்வதறியாது திகைத்தனர்.
சுவாமிகள், பள்ளி வாசலில் உள்ள காஜியார், ஊர்
நாட்டாண்மைக்காரர், முதலியோர் கனவில் தோன்றி -சமாதியை அவ்விடத்திலிருந்து பெயர்த்து எடுத்து பள்ளிவாசலுக்கு
இடையே அடக்கம் செய்யுமாறு கூறினார்.
யாரும் செவிசாய்க்கவில்லை. இரண்டாம் முறை சொன்னார்.
அப்பொழுதும் பலனில்லை. மூன்றாம் முறையும் முடிந்தது.
கடைசியில் பிரம்பால் அவர்கள் கனவில் அடித்து உத்திரவிட்டார்.
ஊர் நாட்டாண்மைக்காரர்கள் , பிரஞ்சு அதிகாரிகளிடம் இதைப்
பற்றி முறையிட்டு -சமாதியை இடம் மாற்றித் தரும்படி
விண்ணப்பித்தார்கள். அதிகாரிகள், காஜியார்
சொல்வதைக் கேட்டு நகைத்தார்கள்.
உடனே அப்பெரியவர்கள், தாங்கள் சொல்வது உண்மையில்ல
என்று தெரியவந்தால்-அதிகாரிகள் தரும் எவ்வித அபராதத்தையும்
ஏற்க தயார் என்றார்கள். அதிகாரிகளும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
அப்போது புதுவை கவர்னராக இருந்தவர் பிரான்சுவா மர்த்தேன்
என்பவராவார். அவரது கனவிலும் மௌலா சாஹிப் மெய்ஞானி
தோன்றி, தம்முடைய சமாதியின் இடத்தை பள்ளிவாசலுக்கருகில்
மாற்றும் படி அறிவித்தார்.
ஒரு வெள்ளிக்கிழமையன்று இஸ்லாமிய மக்கள் வேதம்
ஓதிக்கொண்டே சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும்
இடத்திற்கு வந்தனர்-உடன் பிரஞ்சு அதிகாரிகளும் வந்தனர்.
சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை
தோண்டினர். அக்கணமே, இரத்தம் பீறிட்டு அடித்தது. அங்கு சுற்றி
நின்றிருந்த அனைவரின் மேலும் அக்குருதி பட்டது. இதைக் கண்டு
ஆச்சரியப்பட்ட அதிகாரிகள், காஜியார் சொன்னது உண்மைதான்
என்று நம்பினர். பொது மக்களுடன், பிரஞ்சு அதிகாரிகளூம்
ஊர்வலமாக பெட்டியை எடுத்துச் சென்று-தற்பொழுதுள்ள
இடத்தில் இறக்கி வைத்தனர்.
பெட்டியை திறந்து பார்த்த பொழுது-முஸ்லீம் மதச்சடங்கின்படி
சுவாமிகள் மூன்று அடுக்காக துணியில் சுற்றப்பட்டிருந்தார்.
முகத்தில் மூடப்பட்ட துணியை விலக்கிப் பார்த்தனர்.
சுவாமிகளின் முகம் தெய்வீகக் கலையோடு தென்பட்டது.
உடல் சிறிதும் கெட்டுப் போகாமல்-உயிருள்ள உடலைப் போல்
காட்சியளித்தது. தூங்காமல் தூங்கி சுகம் பெறுகிற நிலைப் போல
இருந்தது. யோகத்தில் ஆழ்ந்திருக்கும் தவயோகிப் போல
காட்சியளித்தார். எல்லோரும் சுவாமிகளின் உடலைக் கண்டு
ஆச்சரியப்பட்டார்கள்.
இஸ்லாம் மதகுருமார்களும்,நாட்டாண்மைக்காரர்களும்,
ஊர் மக்களும் சேர்ந்து-மறுபடி சுவாமியை துணியால் மூடி
-பெட்டியை மூடினார்கள். தற்போதுள்ள இடத்தில் சுவாமிகள்
அடக்கம் செய்யப்பட்டார்.அவ்விடத்தில் ஒரு தர்காவும் கட்டப்பட்டது.
தர்காவிற்கு பக்கத்திலேயே பள்ளிவாசல் அமைந்துள்ளது.
அன்றிலிருந்து-இன்றுவரை பிரதி வியாழக்கிழமையிலும்,
வெள்ளிக்கிழமையிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து
வழிபடுகின்றனர்.ஒவ்வோர் ஆண்டும் ஹாஸ் பிறை 10-ம்
நாளில் கொடியேற்றி 20-ம் நாளில் சந்தனக் குடத்தை
ஊர்வலமாகக் கொண்டு வந்து தர்காவில் உள்ள சுவாமிகளின்
சமாதியில் வைத்து வழிபடுகின்றனர்.
இன்றும், அப்பகுதியை சுவாமிகள் -சூட்சும உடலில் சுற்றி வந்து
பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. அருள் ஞானியின் அருட்சக்தி
இன்றும் வெளிப்படுகின்றது என்றால்- அது புதுவை மக்கள்
செய்த பூர்வ புண்ணியமே.
இவர் 17-ம் நூற்றாண்டில் சமாதி கொண்டதாக தெரிய வருகிறது.
1 Comentário:
நல்ல பதிவு. எங்கள் ஊரில் கூட ஒலியுல்லா என்பவரின் சமாதியுள்ளது. மிக்க நன்றி.
கருத்துரையிடுக