|






சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்,புதுவை வில்லியனூர் அருகிலுள்ள
தென்னம்பாக்கம் என்ற சிற்றூரில், ஒரு சித்தர், ஆத்ம சாதனை புரிந்து
வெற்றி கண்டு-அமைதியாக உலவி வந்தார்.

அவருடைய காலம் கி.பி. 1800 லிருந்து கி.பி. 1840 வரை இருக்கலாம்
என்று கூறப்படுகிறது.

அவ்வூர் மக்கள் அவரை அழகர் சுவாமிகள் என்று அழைத்தார்கள்.
சுவாமிகளின் பிறப்பிடம் எது, அவர் எங்கிருந்து வந்தார், அவரின்
தாய் தந்தையர் யார் என்பது யாருக்கும் தெரியாது.

தென்னம்பாக்கம், அழகிய சிற்றூர்.அவ்வூரிலிருந்து ஒரு கி.மீ
தொலைவில் ஐயனார் கோவில் ஒன்று இருந்தது.அதைச் சுற்றி வில்வமரங்களும் ஏனைய மரங்களும் அடங்கிய பெருங்காடாக இருந்தது.
.

சுவாமிகள், அந்த ஐயனார் கோவில் அருகிலுள்ள புதர்களிடையே
அமர்ந்து தவம் செய்வார்.மௌனமாக அங்குமிங்கும் அமைதியாக
உலாவுவார்.மண்ணைப் பார்ப்பதை விட்டு விண்ணைப் பார்ப்பதிலேயே
கவனமாக இருப்பார்.சில சமயம் கோவில் அருகிலுள்ள கிணற்றில்
இறங்கி- நீரினடியில் சிவத்தியானம் செய்வார்.

எப்பொழுதும் பகலிலும் இரவிலும் இந்த ஐயனார் கோவில் பெரிய
ஆலமரத்தடியில் படுத்து இருப்பார்.

சில சமயங்களில் அவர் மேல் பாம்பு சுற்றிக் கொண்டு இருக்குமாம்.
பிறகு போய் விடுமாம்.

அங்கு வரும் மக்களுக்கு உள்ள இடையூறுகளை நீக்கி அருளினார்.
பாம்பு கடித்தவர்களை மந்திரித்தார். நோய்நொடிகளை தீர்த்து
வைத்தார். பேய் பிசாசு பிடித்தவர்களை மந்திரித்து குணப்ப்டுத்தினார்.
பயிர்களுக்கு வரும் நோயை தீர்த்து வைத்தார்.

ஊரார் வீட்டுக்கு கூப்பிட்டால் இதுதான் என் இருப்பிடம், வேறு
இடம் போக மாட்டேன் என்று சொல்லுவார்.
பல சித்து புருஷர்களோடு ஒப்பிடும்படி, பல சித்துக்கள் செய்து
பேராற்றலோடு விளங்கினார்.

சித்தருக்கு 70 வயது திட்டத்தில் வருஷம் பிறந்த முதல் விசேஷத்
திங்களன்று காலையில் ஊர் மக்கள் அனைவரையும் கூப்பிட்டார்.
“உங்கள் ஷேமத்திற்காக நான் ஆணடவனை வேண்டிக் கொண்டே
இருக்கிறேன்.இந்த முதல் சோமவார பூஜையை விசேஷமாக
செய்வோம்” என்று சொன்னார்.

பின்னர், அங்கிருந்த ஏற்றம் இறைத்துக்
கொண்டிருந்த,நீர் நிறைந்த கிணற்றில் இறங்கி மூழ்கினார்.
சுவாமிகள் தியானத்திற்காக செல்லுகின்றார் என்று மக்கள்
நினைத்தனர்.வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.
பக்தர்கள் பயந்தனர்.சிலர் உள்ளே இறங்கி தேடிப் பார்த்தனர்.
சுவாமிகளின் உருவம் அவர்கள் கைகளுக்கு கிடைக்கவில்லை.
சுவாமிகள் அங்கில்லை.இன்னும் சிலர் இறங்கித் தேடிப் பார்த்தும்
சுவாமிகள் கிடைக்கவில்லை.சுவாமியவர்கள் அருள்ஜோதி
ஆகிவிட்டார்கள்.

அன்றிலிருந்து அவ்வூர் மக்கள் சுவாமிகள் இறங்கிய கிணற்றை
சுவாமிகளின் சமாதியாக பாவித்து வணங்கி வருகின்றனர்.
சித்தர் சென்றிரங்கிய கிணறு மூடப்பட்டுத் தூய அமைப்பில்
விளங்குகிறது.கிணற்றின் மேல்தான் எல்லா அபிஷேகமும்
நடக்கின்றது.
சமாதிக்கு மேலே கூரை வேயப்பட்டுள்ளது.

பெண்கள் யாரும் செல்வதில்லை.பெண்கள் யாரும் செல்லக்கூடாது
என்ற நியதியும் விளங்குகிறது.சுவாமிகளின் ஆத்மீக சக்தி பூரண
பிரகாசத்துடன் ஒளிவிடுகின்றது.உயர்ந்த உன்னதமான தெய்வீக
திருவிடமாக அமைந்துள்ளது அழகர் சுவாமிகளின் சமாதி.


 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB