ஸ்ரீ லட்சுமண சுவாமிகள்

|

ஸ்ரீ லட்சுமண சுவாமிகள்








புதுவை, வழுதாவூர் சாலையிலுள்ள சண்முகாபுரம்
என்ற ஊரில் பரமசிவன் என்பவர்க்கு மகனாக
பிறந்தார் ஸ்ரீ லஷ்மண சுவாமிகள்.
நல்ல உயரம்-கருப்பு நிறம்-கட்டான தேகம்.
சுறுசுறுப்பான உடல்.
திருமண வயது வந்தவுடன் முனியம்மாள் என்ற
மங்கை நல்லாளை மணந்து இல்லறத்தை
நல்லறமாக நடத்தி வந்தார்.
சிறு வயது முதலே அம்பாளின் மேல் ஈடுபாடு
கொண்ட சுவாமிகள், திருமணமானவுடன்
வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு, அம்பாளின்
பாதங்களை தஞ்சம் புகுந்தார்.
அவரின் பெற்றோர் அவருக்கு எவ்வளவோ
எடுத்துரைத்தும் அவருக்கு இல்லறத்தின் மேல்
நாட்டம் கொள்ளவில்லை. அம்பாளின் தீவிர
பக்தரானார். வீட்டை மறந்து ,தாய்-தந்தையரை
மறந்து, மனைவியையும் மறந்து மீனாட்சிபேட்டை
அம்பாள் கோவிலே சகலமும் என்றிருந்தார்.
யாராவது கொண்டு வந்து தரும் உணவை மட்டுமே
உட்கொண்டு வாழ்ந்தார்.
சுற்றத்தாரின் தொந்திரவினை தாங்க மாட்டாமல்
அங்கிருந்து அகன்று, மரக்காணம் செல்லும்
சாலையில் உள்ள புத்துப்பட்டு என்னும் ஊரில்
உள்ள ஐய்யனார் கோவிலில் வந்து குடியேறினார்.
தன் மேலாடையாக ஒரு சாக்கு துணியை போற்றிக்
கொண்டு- தெருவில் சுற்றிக் கொண்டிருப்பார்.
அதனால் அவரை “ சாக்கு சாமியார்” என்று
அழைப்பதும் உண்டு.
நாயுடன் பேசுவார்-அவராகவே பேசிக் கொள்வார்.
அம்பாளின் நாமங்களையே உச்சரித்துக் கொண்டு
இருப்பார்.
வானத்தில் கோடு போடுவது போல் ஏதாவது
செய்கை காண்பித்துக் கொண்டிருப்பார்.
யாராவது காசு கொடுத்தால் வாங்க மாட்டார்.
அப்படியே வாங்கினாலும் ஒரு காசை மட்டும்
வாங்கிக் கொண்டு அதை அப்படியும்,
இப்படியுமாக திருப்பி திருப்பி பார்த்து விட்டு
தூக்கி போட்டு விடுவார்.
இவர் கடைவீதியில் சென்றால், கடைக்காரர்கள்
தம் கடையில் சுவாமிகளின் கால் படாதா
என்று ஏங்குவார்கள். சுவாமிகளின் கால் பட்ட
இடம் ஒஹோ என்று விளங்குமாம்.
திடீரென்று ஏதாவது ஒரு கடையினுள் அவராகவே
நுழைவார்-கல்லாவை திறந்து அவராகவே காசு
எடுத்துக் கொள்வார். இல்லையென்றால் கல்லாவில்
உள்ள ஒரே ஒரு காசை மட்டும் எடுத்து தெருவில்
வீசி விட்டுச் சென்று விடுவார்.
அப்படிச் செய்தால் அந்த கடைக்காரருக்கு
நல்ல வியாபாரம் நடக்குமாம்.

   பக்தர்களின் குறைகளை கூர்ந்து கேட்பார்..
அதற்கு பரிகாரம் கூறுவார். அவர் சொல்படி கேட்டு
நடப்பவர்களுக்கு அக்குறை விரைவில் தீர்ந்து போகும்
என்பதை மக்கள் கண்டனர்- திடமாக நம்பினர்.
சுவாமிகள், அம்பிகையின் மேல் தீராத ஈடுபாடு
கொண்டிருப்பதை கண்ட மக்கள்-அவரை கடவுளின்
அவதாரமாகவே கருதினர்.
ஐய்யனார் கோவிலில் சுவாமிகள் படுத்து உறங்கிக் கொண்டிருப்பார். இரவு வேளைகளில், திடீரென்று
பக்தர்கள் யாராவது விழித்துக் கொண்டு பார்த்தால்
அவர் தலை வேறு- உடல் வேறாக தனித்தனியாக
கிடக்குமாம்..மறு நாள் காலையில் சுவாமிகள் நன்றாக
நடந்து செல்வதை மக்கள் ஆச்சரியத்துடன்
பார்த்திருக்கிறார்களாம்.
சுவாமிகள் பஸ் போகும் பாதையில் திடீர் திடீர்
என அமர்ந்து விடுவாராம். சுட்டெரிக்கும் வெய்யிலையும்
கடும் மழையையும் பொருட்படுத்தாமல் மணிக் கணக்காக உட்கார்ந்திருப்பாராம். அது ஏன் என
யாருக்குமே தெரியாதாம்.

சுவாமிகளின் பெருமையை அப்பகுதி மக்கள்
முழுவதும் அறிந்திருந்தனர்.

தான் அம்பாளின் பாதத்தை அடையும் தருணம்
நெருங்கி விட்டதை உணர்ந்த சுவாமிகள்
புத்துப்பட்டு ஐய்யனார் கோவிலின் பின்புறம்
இருந்த பத்மாசூரன் குளக்கரையின் அருகில் தியானத்தில் அமர்ந்து விட்டார்.
நாளடைவில் புற்று மண் வளர்ந்து –சுவாமிகள்
புற்றாகவே மாறி விட்டார்.
சுவாமிகள், 1947-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந்
தேதி சமாதியானார்.




(ராணுவ லாரியில் அடிபட்டு-மறு நாள் காலையில்
ஐய்யானார் கோவிலில் இறந்து கிடந்தவரை
கோவில் பின்புறம் சமாதி வைத்ததாகவும்-
ஒரு செய்தி உண்டு)

இன்றளவும் அவருடைய பக்தர்கள், அவருடைய
சமாதி பீடத்திற்கு வந்து சுவாமிகளுக்கு மலர்
அலங்காரம் செய்து அவருக்கு பிடித்த பால் பாயாசத்தை படைத்து அமைதியாக அமர்ந்து
தியானம் செய்து வழிபட்டுச் செகின்றனர்.

சுவாமிகளின் புற்றின் அருகில் ஒரு பெரிய
வேப்ப மரம் வளர்ந்து நிழல் தந்து வருகிறது.
அதை, திருடன் ஒருவன்  வெட்ட முயன்ற
போது- ”வெட்டாதே” என்று அசரீரி எழுந்தது.
அதை பொருட்படுத்தாத அக்கயவன் அம்மரத்தை
வெட்டியதால்-அங்கேயே விழுந்து விட்டான்.
இரவு முழுதும் அவனால் எழுந்திருக்க முடியாமல்
படுத்துக் கிடந்தான். மறு நாள் அவ்வழியே சென்ற
வழிப்போக்கர்கள் அவன் நிலையைக் கண்டு-அவனை
தூக்கிக் கொண்டு போய் அவன் வீட்டில் சேர்த்தனர்.
வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் அவனுடைய
உயிர் பிரிந்தது.
வெட்டிய மரத்தின் துண்டுகள்
ஐய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தின் போது
பயன்படுத்தப்பட்டது.




ஸ்ரீ லஷ்மண சுவாமிகளின் அருட்சக்தியை கண்ணால்
கண்டவர்கள் இன்றும் சிலபேர் உள்ளனர்.
அவரால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள் நல்ல நிலையில்
வசதியாக உள்ளனர்.
சுவாமிகளின் சமாதி பீடத்தினருகில் அமர்ந்து
மனமுருகி, உண்மையாய் வேண்டுபவர்களுக்கு
சுவாமிகளின் திருவருள் கிடைப்பது முற்றிலும்
உண்மை.








அன்ன தானம் 2

|



அன்ன தானம்



‘அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்
பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே’ .
அந்தணர்க்கு ஆயிரமாயிரம் (கிராமங்கள்) செய்தாலும், ஆயிரமாயிரம் கோட்டை, கோயில்கள் கட்டி முடித்தாலும், ஞானிக்கு அளிக்கப்படும் ஊண் பலம் என்று சொல்லப்படும் அன்னதான தர்மத்திற்கு ஈடாக எந்த செய்கையும் நிச்சயமாக நிகரில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் திருமூலர்.
`பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றூள் எல்லாந் தலை ` என்பார் திருவள்ளுவர்.
நம்மிடம் உள்ள உணவை  உயிர்கள் வாழ பகிர்ந்து அளித்து உண்டு வாழ்பவன் எல்லா உயிரினும் மேலானவராக கருதப்படுகிறார். மனிதருக்கு மட்டுமல்ல-எந்த ஒரு ஜீவராசிக்கும் உணவளிப்பதும் அன்னதானமாகும். ஒரு பிடி சர்க்கரையை எறும்புப் புற்றில் போடுவதும், காக்கைக்கு சோறிடுவதும், பசுவிற்கு தழையைக் கொடுப்பதும் அன்னதானம் தான். இதைத்தான் அன்றே திருமூலர்
~யாவர்க்குமாம் இறைவற் கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.~..........என்றார்.
தானம் மூன்று வகையாக சொல்லப்படுகிறது. தலைப்படு தானம், இடைப்படு தானம், கடைப்படு தானம்.தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் தானம்(தர்மம்) நாற்பத்திரண்டு வகைப்படுத்தப்படுகிறது. அதில் மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமாகவும் அனைவரும் செய்தே ஆக வேண்டியதாகவும் கருதப்படுவது அன்னதானமே. இதில் மனிதர்க்கு அரிசிசோறு உணவிடுவது என்பது.சாலச் சிறந்தது. ஏனெனில் அரிசி யில் –அரி என்பது அரியையும்(பெருமாளையும்), சி என்பது சிவனையும் குறிப்பதாகும். அன்னதானத்தில் வழங்கப்படும் அன்னம் (சாதம்) தோஷமற்றது. இந்த அன்னம் ஐந்து தெய்வ அம்சம் கொண்டது. 1) நெல்- தானியம்- தான்யசக்தி. 2) நீர் கொண்டு சமைப்பதால்-நீர் சக்தி. 3) நெருப்பால் சமைப்பதால்- தீ சக்தி. 4) அமிர்த சக்தி. 5) சோறு வேகும் வாசனை ஆகாச சக்தி. ஆக ஐந்து சக்திகளை கொண்டு –ந-ம-சி-வா- என்னும் ஐந்தெழுத்து மந்திரங்களால் ஆனது. உலகின் முதலில் தோன்றிய தாவரமே நெல். தருமம் செய்வதற்கு ஏற்ற இடம் இந்த மண்ணுலகம் ஆகும். அன்னம் அளிக்கும் இடம் பசித்தவர் அங்கமாகிய வயிறு என்பதை உணர்தல் வேண்டும்.` வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்` என்றார் வள்ளல் பெருமான். பயிர் வாடுவது பசுமை (நீர்) இன்மையால். உணவு இன்மையினால். அந்த வாட்டத்தை மனிதரிடம் காண பொறுக்காதவராய்த்தான் பசியால் படும் துன்பத்தை போக்க உறுதி பூண்டு தர்ம சாலை நிறுவி  அனைவர்க்கும் உணவளித்து உலக உயிர்களின்   பசியை போக்குகிறார். 63 நாயன்மார்களில் 30 நாயன்மார்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் மக்களுக்குச் சோறிடும் தொண்டையே வலியுறுத்தியிருக்கிறார்கள். அத்துடன் மட்டுமல்லாமல் மூர்க்க நாயனார் சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த சிறப்பையும் அதிபத்த நாயனார் நாள்தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனினை இறைவனுக்கு படைத்த பாங்கினையும் நாம் அறிவோம். மண்ணில் மனிதராகப் பிறந்த ஓவ்வொருவரும் அடியார் தமக்கு அன்னமிடுதலாகிய அமுது படைத்தல் வேண்டும் என்று திருஞானசம்பந்த பெருமான் கூறுவார்`.
~மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும்

அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்

காண்ணினால் அவர் நல்விழாப் பொலிவுகண்டார்தல்
உண்மையாமெனில் உலகர்முன் வருகென உரைப்பார்.~
ஒருவருக்கு கொடுத்துவிட்டு நாம் உண்ண வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் பதிய வேண்டும். அப்பொழுதுதான் நம்மிடையே மனிதநேயம் வளரும். நாடும் நலம் பெரும். அன்னதானம் செய்வது பற்றி கூறுகையில் `-
1)  ஓதுவர்க்கு உணவு- கல்வி பயிலுகின்றவர்களுக்கு உணவளித்து அவர்களை பராமரித்தல்.
2)  அறுசமையத்தார்க்கு உண்டி – சமயங்களில் ஆறு வகை உண்டு (சைவம், வைஷ்ணவம்,சமணம், கெவ்மாரம், புத்தம், சாக்தம்) இந்த ஆறுவகைச் சமயத்தாருக்கும் சமய வேறுபாடு இன்றி உணவளித்தல்.
3)  பசுவுக்கு வாயுறை – பசுக்களுக்குத் தீனி அளித்து பராமரித்தல்.
4)  சிறைச்சோறு – கைதிகள் பட்டினியில்லாமல் இருக்க உணவளித்தல்.
5)  ஐயம் – யாசித்து (பிச்சையெடுத்து) வருகிறவர்களுக்கு உணவளித்தல்.
6)  திண்பாண்டம் நல்கல் – வழிபோக்கர்களுக்கு உணவு, குடிநீர் முதலியன கொடுத்து உபசரித்தல்.


7)  அறவைச்சோறு – அநாதைகளுக்கு உணவளித்தல்.


அனைத்தையும் துறந்த பட்டிணத்தடிகள் பசியை மட்டும் துறக்கமுடியவில்லை. அப்பர் பெருமானுக்கு இறைவனே கட்டுச்சோறு சுமந்து வந்து உணவு தருகிறான். சுந்தரருக்கோ இறைவன் பிச்சையெடுத்து வந்து உணவளிக்கிறான். இராமலிங்க அடிகளாருக்கோ வடிவுடையம்மனே அண்ணி உருவத்தில் வந்து உணவளித்து பசியாற்றுகிறாள். பசி என்பது ஒரு பருவத்தில் தோன்றி ஒரு பருவத்தில் மறைந்து விடுவதில்லை. பிறப்பு முதல் இறப்பு வரை பசி என்பது இருந்து கொண்டிருக்கும். யார் ஒருவர் மற்றவர் பசியை போக்குகின்றார்களோ அவர்களே உலகத்தில் உயர்ந்தவர்கள்.பசியடைந்தோர்களுக்கு உணவளிப்பதே சிறந்த தானம். இறைவனை அடையும் வழி. முக்தியைப் பெறுவதற்கு முதல் படி என்பதை உணர வேண்டும். ஆகவே பசிப்பிணி நீக்குவது சிறந்த சிவப்பணியாகும்.~வயிற்றுக்கு சோறுண்டு கண்டீர் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்` என்றும் ~ தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்~ – என்றும் மகாகவி பாரதி உரக்கச் சொல்லியுள்ளார். ஆகவே, உணவிடுங்கள்- பசித்தவர்களுக்கு உணவிடுங்கள்- அன்னதானம் செய்யுங்கள்-வாழ்வில் அனைத்து நலனும் பெற்று வாழ்வாங்கு வாழ்வீர்கள்.



அன்ன தானம் 1

|

அன்ன தானம்


உலகில் தோன்றிய உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழ இன்றியமையாதது உணவேயாகும். உணவின்றி உயிரில்லை.உயிரின்றி உலகில்லை. உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்களுக்கு அளிப்பதே அன்னதானமாகும். அப்படிபட்ட உணவை பசித்தவர்க்கு அளிப்பது என்பது மிகவும் மேன்மையானது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. பசித்தவர்க்கு உணவு கொடுப்பது என்பது உயிர் கொடுத்ததற்கு ஒப்பாகும்.
~அற்றார் அழிபசி தீர்த்தல் அக்தொருவன் பெற்றார் பொருள் வைப்புழி~ என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். ஏழைகள் பசியால் வாடும்போது, அன்னமிட்டு அப்பசியைப் போக்குபவன் இறையருளைப் பெறுவது உறுதி. இந்த புண்ணியபலன் சரியான சமயத்தில் நம் உயிரையும் காக்கும் என்பதே அவர் கருத்து. அன்னதாதாசுகி பவ – உணவு கொடுப்பவர் சுகமாக வாழ்வார் என்று மூதுரை உரைக்கிறது. அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலை காக்கும் என்றும் சந்ததிகளை வளமாக வாழ வைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னதானம் செய்வதால் எல்லா விதமான பலன்களும் கிடைக்கும்- வேண்டுதல்களும் நிறைவேறும். அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் இராமலிங்க சுவாமிகள் 1867 ஆம் ஆண்டு தர்மச் சாலையை நிறுவி, அனைவர்க்கும் உணவளித்து பசிப் பிணியை போக்கினார். அன்று அவர் ஏற்றிய அணையாஅடுப்பு இன்றளவும் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கிறது. பசித்தவர்களின் வயிற்றுக்கு உணவளித்து வருகிறது. அன்னதானத்தின் பெருமைகளை குறிப்பிடும்போது, சகமனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதியைப் பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து, கொல்லும் தருணத்தில், உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் வருத்தாது-வறுமை தீண்டாது-இறையருள் எப்போதும் துணை நிற்கும். என்றும் மனதில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகின்றார் வள்ளலார். பசித்தவர்களுக்கு பசியை நீக்குகின்ற விஷயத்தில் அடியாரை ஆண்டவன் தடுத்தாலும் கூட சிறிதும் தடைபடாமல் தம் கடமையை செய்ய வள்ளலார் வற்புறுத்துகின்றார். ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவற்றைச் செய்கிறவர்கள் கடவுளர்க்குச் சிறிதும் பாத்திரமாக மாட்டார்கள். பசியென்கிற அபாயத்தில் இருந்து நீங்கச் செய்கின்ற உத்தமர்களை எந்தச் சாதியினராயினும் எந்த சமயத்தவராயினும் எந்த செய்கை உடையவராயினும் அவர்கள் தேவர், முனிவர், சித்தர், போகர் முதலியவராலும் வணங்கத்தக்க சிறப்புடையவர்கள் ஆவர் என்கிறார் வள்ளலார். பசிப்பிணியை நீக்குபவர் பிறவிப்பிணியையே நீங்குவார் என்பார். 

 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB