|











ஓம் ஸ்ரீ தொள்ளைக்காது சுவாமிகள் தெற்கிலிருந்து
புதுவைக்கு வந்தார்.சுத்த பிரம்மச்சாரி.சுவாமிகளின்
பெயரிலிருந்தே அவர் காதுகளில் பெரிய துளையிருக்கும்
என்று தெரிய வரும்.சுமார் 6 அடி உயரமிருப்பார்.சிவந்த நிறம்.
கட்டான தேகம். வயிறு சிறிது பெருத்திருக்கும்.கரங்கள்
முட்டிக்கால் அளவு நீண்டிருக்கும்.கரங்களிலே தாமரை ரேகை
அமைந்திருக்கும். நெற்றி அகன்று உயர்ந்தோங்கியிருக்கும்.
கோவணம் கட்டியிருப்பார்.

இள வயதிலேயே தந்தையை இழந்த சுவாமிகள்,தாயார் தனக்கு
திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டு மிரண்டார். திருமணத்தை
ஒரு சுமையாக நினைத்து பயந்தார்.
பெண் வீட்டார் தன் இல்லத்திற்கு வந்திருந்த பொழுது,
செய்வதறியாது வீட்டின் பின்புறம் உள்ள தன் குலதெய்வமான
அம்மனிடம் சென்று முறையிட்டார்.
அப்பொழுது ஒர் ஒலி கேட்டது.மெல்லியதாக கேட்ட அந்த ஒலியை
கேட்டுக் கொண்டே நடக்கத் தொடங்கினார்.தன்னையே மறந்து
நடந்தார். மாலையில் நடக்க ஆரம்பித்து -இரவும் கடந்து,
விடியும் வரை நடந்தார்.இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கும்
அந்த பேரொலியை கேட்டுக் கொண்டே நடந்தார்.ஆரம்பத்தில் சில தேவதைகளைப் பார்த்தார். பைசாசங்கள்,பிரம்மராட்ஷதர்கள்
போன்ற ஏனைய சக்திகள் சுவாமிகளின் கண்களுக்குப் புலப்பட்டன.
நடையின் வேகம் அதிகரித்தது.அப்பொழுது ” இந்தா”-”ம்” என்ற
இரு சொற்கள் கேட்டன. சுவாமிகள் சிறிதும் பதறாது
ஒலி வந்த திசையை நோக்கினார்.அவர் கரத்தில் இரண்டு
மாம்பழங்கள் வந்து விழுந்தன.சிரித்துக் கொண்டே பழத்தை
புசித்தார்.புசித்துக் கொண்டே ஒலி வந்த திசையில் இன்னும்
வேகமாக நடந்தார்.

ஆத்மீக சக்திவாய்ந்த,ஞான பூமிக்கு-புதுவையம்பதிக்கு-
விடியற்காலை வந்து சேர்ந்தார்.வந்தவரை அவ்வொலி, தற்போது மொரட்டாண்டி என்றழைக்கப்படும் ஊருக்கு அழைத்து சென்றது.
அவ்வூரிலேயே சில காலம் தங்கினார்.அவ்வூர் மக்கள் சுவாமிகளுக்கு
உணவு,பழம் முதலியன கொடுத்து ஆசிர்வாதம் பெற்றனர். ஆனால்
சுவாமிகள் உணவு எதையும் உண்ணாமல் “ஓம்” “ஓம்” என்று
முழக்கமிட்டுக் கொண்டு ஓங்காரத்தில் ஆழ்ந்து விடுவார்.
சுவாமிகளின் போக்கு முரட்டுத் தனமாக தோன்றியதோ
-என்னவோ-மக்கள் அவரை முரட்டு ஆண்டி என்று அழைக்கத்
தலைப்பட்டனர்.பின்னர்,அப்பெயரே மருவி “மொரட்டாண்டி” என்று
ஊரின் பெயராக-அவர் நினைவாகச் சூட்டப்ப்ட்டது.
அங்கிருந்து சுவாமிகளை,புதுவையிலுள்ள ஸ்ரீ மணக்குள விநாயகப் பெருமானிடம் அத்திருவொலி அழைத்து சென்றது.

அக்காலத்தில், புதுவை கடற்கரைக்கு கொஞ்ச தொலைவில்,
மணற்பாங்கான இடத்தில் ஒரு குளமும், அதைச் சுற்றி அடர்ந்த
தோப்புமாக இருந்தது. அக்குளத்தினருகில் பிள்ளையார் சிலை
ஒன்றும் இருந்தது. மணற் குளத்தருகில் பிள்ளையார் இருந்ததால்
-எல்லோரும் அவ்விநாயகரை-மணக்குள விநாயகர் என்று
அழைத்தனர்.

மனித கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பிய
சுவாமிகளுக்கு-அந்த இடம், அவர் மனதில் அமைதியை
தோற்றுவித்தது. ஞான பூமியிலே, சித்தர்கள்,தவசீலர்கள்,
ஆத்ம சாதனையாளர்கள் தேடும் பேரின்பம் ஒளிரக்கண்டார்.
தன்னை இப்புதுவைக்கு அழைத்து வந்த அந்த ஓங்கார ஒலியை
வணங்கினார்.தான் புதுவைக்கு அழைத்து வரப்பட்ட நோக்கத்தை
உணர்ந்து கொண்டார்.
அங்கு சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது.

மீண்டும் அப்பேரொலி சுவாமிகளை முத்து மாரியம்மன்
ஆலயத்திற்கு அழைத்து சென்றது.அதி அற்புத அழகு வாய்ந்த
அன்னையை-தாயின் தரிசனக் காட்சியை- அன்றிரவு
கண்ணாரக் கண்டார்.வாய் பேசா ஊமையானார்.
ஞான மோன நிலைக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு -யாவற்றையும்
உணர்ந்தார்.இடைவிடாது தாயை வணங்கிக் கொண்டேயிருந்தார்.
சித்த பூமி, தன் ஞானச் செல்வனுக்கு அருளை வாரி வழங்கியது.

காலையில் விநாயகரை பூஜை செய்வது வழக்கம். பின்
முத்து மாரியம்மனிடம் நிஷ்டையில் அமர்வார்.
பின் மொரட்டாண்டி செல்வார். இவ்வளவும் நடந்தே சென்று
முடிப்பார். காலங்கள் சென்றன.ஆத்ம சக்தி தீவிரமாக
வெளிப்படத் தொடங்கியது.
நடப்பதை விட்டார்.காலையில் ஸ்ரீ மணக்குள விநாயகரை
வழிபடுவார். பின் மறைந்து அம்மனிடம் நிஷ்டையில் இருப்பதாக
தெரிவார். பின் மறைந்து மொரட்டாண்டிக்கு செல்வார். சுவாமிகள்
எங்கிருக்கிறார்,என்ன செய்கிறார், என்பதை மக்களால்
கண்டு கொள்ள இயலவில்லை.பக்தர்கள் வணங்கினாலும்
சுவாமிகள் அப்படியே இருப்பார். யார் வந்தாலும், யார் சென்றாலும்
சுவாமிகள் அவரை நோக்கார்.
ஆனால், யார், என்ன துன்பம் என்று சுவாமிகளை தேடி வந்து
முறையிட்டாலும்-அவர்களின் துன்பம் பறந்தோடியது.
நோயாளிகள், சுவாமிகள் தரிசனத்திலேயே குணமடைந்தார்கள்.

சுவாமிகள் அருளுடலில் ஆத்ம பேரொளி வீசத் தொடங்கியது.
சாதாரண மனிதர்களால் அருகில் செல்ல முடியவில்லை.
பேரனல் வீசியது.அறுபது வயதான சிலர் சுவாமிகளுக்கு
தொண்டு செய்ய முனைந்தனர்.சுவாமிகள், ”அடுத்த பிறவியில்
உன் எண்ணம் ஈடேறும்-போ” என்று சொல்லி மறைந்து விடுவார்.

காலங்கள் உருண்டோடின. அம்பாளின் கட்டளைக் கிடைக்கப்
பெற்றார். ஒரு நாள் மாலை சுவாமிகள் நிஷ்டையில் அமர்ந்தார்.
அன்னையின் ஆனந்தத் திரு நடனக் காட்சியைக் கண்டார்.பேரொலி கேட்டது.எழுந்தார். அம்மாவை பலதடவை சுற்றினார்.
தொடர்ந்து ஒன்பது நாட்கள் சுற்றினார்.
பௌர்னமி அன்று “வா, போகலாம் “என்ற ஒலியைக் கேட்டார்.

வினாயகர் தரிசனம் பெற்றார்.ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில்
அருகில் வந்து சிரித்துக் கொண்டே தனது உடற்சட்டையை தூக்கி
வைத்தார்.பிரம்மம்-பரப்பிரம்மத்தோடு இணைந்தது.

மணக்குள விநாயகர் ஆலயத்தில் பெரு நெருப்பு மூண்டது
போன்ற காட்சி தென்பட்டது.அந்நெருப்பின் நடுவே சுவாமிகள்
அமர்ந்திருக்கக் கண்டனர்-மக்கள்.
சிறிது நேரத்தில், நெருப்புக் காட்சி மறையவே-சுவாமிகள்
அருகில் சென்று தொட்டுப் பார்த்தனர்.சுவாமிகளின் உடல்
நெருப்பு போல் அனல் வீசியது.
ஆனால், சுவாமிகள் ஆடாமல் அசையாமல் யோகத்தில்
அமர்ந்திருப்பது போல் காட்சியளித்தார்.மூன்று நாட்கள் வரை
ஒரு அசைவும் இல்லாதிருப்பது கண்டு-சந்தேகம் கொண்டு,
சுவாமிகள் இறந்து விட்டார் என்ற முடிவிற்கு வந்து சுவாமிகளின்
உடலை மணக்குள விநாயகருக்கு அருகிலேயே ஒரு இடத்தில்
சமாதி செய்தனர்.

ஸ்ரீ தொள்ளைக்காது சுவாமிகள் மந்திர ஜபத்திலோ,மற்றைய
நிலையிலோ இருந்து ஆத்ம சாதனை செய்ததாக தெரியவில்லை.
சுவாமிகள் யாரிடமும் நட்பு கொண்டதுவுமில்லை-யாரையும்
ஜெயிக்க நினைத்ததுவுமில்லை.சுவாமிகளுக்கு மற்ற
ஆத்ம ஞானிகளைப் போல் சிரமங்கள் வந்ததாக தெரியவில்லை.
பிறவியிலேயே அருளொடு பிறந்தார்-ஓங்கார ஒலி கேட்டு ,
அந்த ஒலியுனுள்ளே வாழ்ந்தார்.
அனைத்தையும் அதனுள்ளே உணர்ந்தார். ஓங்காரம் அவரை உயர்த்தியது.
அவருக்கு மனிதகுரு யாரும் இருந்ததாக தெரியவில்லை.
அவருக்குள்ளிருந்து ஒலித்துக்கொண்டிருந்த ஓங்கார ஒலியே
அவருக்கு ஞானாசிரியராக இருந்தது.
கருவிலிருக்கும் போதே அனாகதம் என்று சொல்லக்கூடிய
நான்காவது சக்கரம் வேலை செய்யத் தொடங்கியதால் தான்
சுவாமிகள்-அந்த பிரணவ பேரொலியை உணர்ந்தார்.
பிரணவ பேரொளி வெளிக்கிளம்பினால் தான் நிஷ்டை கைகூடும்.
சுவாமிகளின் உடல் மனித உடலாக சிறிது காலமிருந்து
பின் அருளுடலாக மாறி,நாத உடலாகியது . பிரம்மப் பேரொளி வீசும்
ஒளி உடலாகியது.
சுவாமிகளின் ஒளிஉடல் புதுவை ஸ்ரீ மணக்குள விநாயகர்
கோவிலினுள்- சமாதி செய்யப்பட்டுள்ளது.
வேதாந்தத் துறையில் சென்று வெற்றி கண்டு நாதாந்தத்தின் மூலம்
சுவாமிகள் பரப்பிரம்மத்தோடு ஐக்கியமானார்.இதுவே சுவாமிகளின்
ஆத்ம சாதனையின் மூலக் கருத்து.



தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளரி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே
--திருமந்திரம்



 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB