|



ஸ்ரீ சிவஞானபால சித்தர்,பத்து வயது நிரம்பிய பாலகனாக
காட்சியளித்ததால், மக்கள் அவரை பால சித்தர் என்றும்,
மக்களுக்கு சிவஞானத்தை போதித்து சிவ ஞான அறிவை வளர்த்ததால்
அவரை சிவஞான பாலசித்தர் என்றும் அழைத்தனர். தற்பொழுது
பொம்மையார்பாளையம் என்று அழைக்கப்படும் பிரம்மபுரத்தில்
மக்களுக்கு ஆசி வழங்கி வந்தார்.

மிகவும் குள்ளமானவர்.நீண்ட சடைமுடி.காதுகளை குண்டலங்கள்
அலங்கரித்திருக்கும்.நெற்றியில் விபூதியும்,கழுத்தில் உருத்திராட்சமும்
ஒளி விடும்.வலக்கரம் சின் முத்திரையுடன்,இடக்கரம் விபூதியும்
மந்திரக்கோலையும் கொண்டிருக்கும்.இடையில் கோவணம்.
சதா பஞ்சாட்சரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பார்.சிவயோக சமாதியில்
ஆழ்ந்திருப்பது அவரது வேலை.

சிவஞான பாலசித்தர், மற்ற மனிதர்கள் உண்டு வாழ்ந்த உணவை
உண்பதில்லை.தினமும் காலையில் சதுர கள்ளிப் பாலைக்
கறந்து உணவாக அருந்துவார்.அத்தோடு சிறிது ஆவாரம் பூ
கிடைத்தால் அதையும் சாப்பிடுவார்.

மூலாதாரத்தில் மூண்டெழும் தீயை, வாசி என்னும் காலால்
எழுப்பி,உடல் முழுவதும் கனன்று, ஜோதிமயமாக எரியவைத்த
சித்தருக்கு சதுரக் கள்ளிப் பாலின் வெம்மை என்ன செய்யும் ?
பால் உள்ளே சென்றவுடன் அதுவே அவராகும்,அவரே அதுவாவார்.
எல்லாம் ஏகநிலையான பிறகு பகையில்லை--அந்நிலையை
எய்தியிருந்தார் சிவஞான பாலசித்தர்.

சிவஞான பாலசித்தருக்கு முருகப் பெருமான் தன் அருளானந்த
தரிசனத்தை தந்தருளியுள்ளார்.சித்தர் உலகம் உய்ய வந்த
அவதாரம்.பிரம்மபுரத்திலிருந்து புறப்பட்டு இப்பொழுது மைலம்
என்றழைக்கப்படும் மயூராசலம் சென்றார்.அங்கு சிலகாலம் தங்கி
முருகப் பெருமானை வழிபட்டார்.பிறகு பெருமுக்கல் மலைக்கு
வந்தார்.
அக்காலத்தில் பெருமுக்கல் மலை சித்தர்களுக்கும்,ஞானிகளுக்கும்
தீவிர பக்தர்களுக்கும் உறைவிடமாக திகழ்ந்தது.மலையைச் சுற்றி
மூலிகைகள் நிறைந்திருந்தன.அம்மலையில் நம் சித்தர் பலகாலம்
தங்கி ஆத்மசாதகர்களுக்கும்,பக்தர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கினார்.

சித்தருக்கு தினந்தோறும் ஒரு அம்மை சதுரக் கள்ளிப்பால் கொண்டு
வந்து கொடுப்பார்கள்.அம்மவைக்குத் தனக்கு குழந்தையில்லையே
எனற ஏக்கம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் பாலைக் கறந்து பாலசித்தரின் எதிரில் வைத்துவிட்டு
சோகமாக நின்றிருந்தார்கள்.அம்மையின் எண்ண ஓட்டத்தை அறிந்த
பாலசித்தர்-தான் குடித்த பாலின் மிச்சத்தை அவளிடம் கொடுத்து
குடிக்கச் சொன்னார். அந்த அம்மையும் ஆனந்தத்தோடு குடித்தார்கள்.
சதுரக் கள்ளிப்பால் சிவஞான செல்வமாக அவள் வயிற்றில் வளர்ந்தது.
குழந்தையும் பிறந்தது.பாலை உண்டு பிறந்ததால் அக்குழந்தை
சிவஞான பாலைய சுவாமிகள் என்று பெயர் பெற்றது.

அக்குழந்தை-வளர்ந்து பாலகனான பின் ஞானாபதேசம் செய்து
ஆச்சார்ய பீடமும் அளித்தார்-சிவஞான பாலசித்தர்.

அங்கிருந்து பிரம்மபுரத்திற்கு வந்தார்.சிறிது காலம் தங்கி
மக்களின் குறைகளை போக்கினார்.பின் மயூராசலம் சென்றார்.
அங்கு சிறிது காலம் தங்கி சிவஞான யோகத்தில் ஆழ்ந்தார்.
முருகப்பெருமானின் கட்டளை கிடைத்தது. பணி முடிந்ததை
அறிந்தார். சிவயோக சமாதியில் ஆழ்ந்தார்.

மயிலம் மலையில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் சன்னிதானத்தின்
தென்பகுதியில்-மிதுன மாதத்தில் -திருவாதிரை நட்சத்திரத்தில் சித்தர்
சிவலிங்கமானார்.சுவாமிகளின் சமாதி இன்றும் அருள் பாலித்துக்
கொண்டிருப்பதை தர்ம சிந்தனையும் சத்திய நெறியும் கொண்டு
வாழ்கின்றவர்கள் அறிவார்கள்.

























சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவயோகம் இன்றிப் பரலோகம் ஆமே
-திருமந்திரம்














 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB