சித்தர்கள்

|

சித்தர்கள் யார் என்ற விளக்கத்திற்கு, பலரும்
தெளிவற்று இருக்கிறார்கள்.ரிஷிகள்,முனிவர்கள்,
யோகிகள், சாதுக்கள்,ஞானிகள்,தத்துவ மேதைகள்....
இவர்கள் யாரொருவரும் சித்தராக கருதப்படுவார்கள் இல்லை.
சித்தர்கள், சாதாரண மனிதர்களாய் பிறந்து
தங்களின் தனியாத இறைதரிசன ஆவலால் -
கடும் மனப்பயிர்ச்சியினால்-தவநிலையினால்-
சாதாரண மனித நிலையை விட்டு மேம்பட்டு
இறைனிலையை அடைந்தவர்கள்.இறைலோகத்தில்
வசிப்பவர்கள்.இறையுருவாகவே மாறுதல் அடைந்தவர்கள்.
இவர்கள் தங்கள் பேராற்றலால் இறவா பேறு பெற்றவர்கள்.
சித்தர்கள் என்றால் வீடுபேறு அடைந்தவர்கள்
எனப்பொருள் கொள்வர்.அட்டமா சித்தி முதலிய
யோகசித்தி பெற்றவர்களையும் சித்தர்கள்
என்று அழைப்பர். சிலர் சித்துக்கும் சித்தத்துக்கும்
தொடர்பு காட்டிச்சித்தத் தெளிவுடையாரே சித்தர்
என விளக்கம் அளிப்பர்.

'சிந்தையிலே களங்க மற்றார் சித்தன் ஆவான்.’
(அகத்தியர் நூறு 50)

'சிந்தை தெளிந் திருப்பவன் ஆர் அவனே சித்தன்
(வான்மீகர் சூத்திர ஞானம் 2 )

'செகமெலாம் சிவமென்றே அறிந்தோன் சித்தன்
திறந்துமனத்தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
(வான்மீகர் சூத்திர ஞானம் 3)

சித்தருட் சித்தராய் விளங்கிய திருமூலர்
சித்தர் பற்றிக் கூறும் செய்திகள் ;

'யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே உளரொளி
யோகச் சமாதியின் உள்ளே உள சத்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே"
(1490)

'சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந் தோயாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே"

யோகச் சமாதியை விரும்பியவரும் சிவத்தைக்
கண்டவரும் சித்தர் ஆவர் எனக் குறிப்பிடுகிறார்.

 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB