|

புதுவை -சித்தர்கள் வாழ்ந்த ஒரு சித்த பூமி.
புதுவை - தவசீலர்களுக்கு ஞானத்தை வாரி வழங்கிய
ஒரு ஞான பூமி.
புதுவை - பரம்பொருளின் அருள் பெற்ற ஒரு புண்ணிய பூமி.


புதுவை என்ற இச்சிறு நிலப்பகுதியில் ஐந்நூறு
ஆண்டுகளுக்குள் சுமார் 32 ஆத்ம ஞானிகள் சமாதி
எழுந்தருளியுள்ளார்கள்.அவர்கள் இவ்வுலகின் எல்லா
பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கடுந்தவம் மேற்கொண்டு
இறை தரிசனம் பெற்று இறைவனோடு ஐக்கியமாகி
விட்டார்கள்.

ஆத்ம ஞானிகளை தன்னகத்தே அன்போடு அழைத்து
அவர்களின் ஆத்ம சாதனைக்கு உதவியும் செய்து
அவர்களுக்கு வெற்றியும் தருகிறது புதுவை என்ற
இப்புண்ணிய பூமி.
ஞானம் விளைகின்ற காரணத்தால், ஞானிகள் தவம் புரியும்
இடமாக இருப்பதால்-இப்புதுவையை ஞான பூமி என்றே
அழைக்கிறார்கள்.

புதுவை புண்ணியம் செய்த பூமி. புண்ணியவான்கள்
தோன்றிய பூமி.ஆத்மஞானிகள் இப்பூமியின் மேல் காதல்
கொண்டு ஆனந்த மேலீட்டால் வருகிறார்கள்.

இச்சித்த பூமியைப் பற்றி ஒரு தனிபாடல் இவ்வாறு
பாடப்பட்டுள்ளது;-

எத்தலம் சென்றிட்டாலும்
எத்தீர்த்தம் ஆடிட்டாலும்
இந்த சித்தர்வாழ் புதுவைபோல்
சிறந்தது ஒன்றில்லை கண்டீர்
முத்தியும் உதவும் ஞானம்
முப்பொருள் தனையும் ஈந்து
சித்தனே வந்து இங்கு
சிவகதி அடைந்தார் அன்றோ


முற்காலத்தில் அகத்திய மாமுனிவர் சமைத்த “வேதபுரி”
என்னும் இடத்தில் தான் தற்சமயம் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் நிறுவப்பட்டுள்ளதென்பர்.

புதுவைக்கு வந்த அகத்தியர் ரெட்டியார்பாளயத்தில் உள்ள
இடத்தில் வேத பாடசாலை
அமைத்து,உலகம் உய்ய, அமைதியோடும்,ஆனந்த
பரவசத்தோடும் வாழ வேத ஒலியைப் பரப்பினார்.
அதன் விளைவாக ஞானிகள் புதுவைக்கு விஜயம்
செய்கிறார்கள்.

வடலூர் இராமலிங்க சுவாமிகள் புதுவை அம்பலத்தாடையார்
மடத்து வீதியில் சுமார் மூன்று மாதங்கள் தங்கியிருந்து,
சன்மார்க்கத்தின் சக்தியை பரப்பினார்.

கர்னாடகா யுத்ததின் போது, சிதம்பரத்தில் இருந்து, திருவாசக
வெள்ளி பெட்டகத்தை--யுத்தத்தின் அழிவிலிருந்து மீட்டு
புதுவைக்கு கொண்டு வந்து பாதுகாத்தார் ஸ்ரீ நாகலிங்க
சுவாமிகள். இன்றும் திருவாசகம் அடங்கிய வெள்ளி பெட்டகம்
புதுவை அம்பலத்தாடையார் மடத்து வீதியில் உள்ள
ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் மடத்தில் வைத்து பாதுகாக்கப்
பட்டு வருகின்றது.மகா சிவராத்திரியன்று திறக்கப்பட்டு
பூஜைகள் செய்யப்படுகின்றது.

மகாகவி பாரதியார் புதுவையில்-குயில் தோப்பில் பாடல்
இயற்றிய பொழுது-அங்குள்ள சித்தர் மகான் ஸ்ரீ சித்தானந்த
சுவாமி மேல் ஒரு பாடல் இயற்றியுள்ளார்;-
-இஞ்ஞான பூமியின் ஈர்ப்பால்
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியாரும்
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா,
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
(1 பாரதி அறுபத்தாறு) எனத் தம்மைச் சித்தராகக்
கூறிக் கொள்கிறார்.

பாரதத்தின் பல திசைகளிலிருந்து ரிஷிகளையும்,
ஞானிகளையும் தவச்செல்வர்களையும்,சித்தர்களையும்,
தெய்வ நினைப்பில் ஆனந்த களிப்பு எய்தியவர்களையும்,
யோகிகளையும் ஈர்க்கும் சக்தி இப்புனித பூமிக்கு உண்டு.
மேலும் ,இலங்கை,பிரான்ஸ்,போன்ற அயல்
நாடுகளிலிருந்தும் உயர்ந்த மனிதர்கள் புதுச்சேரியை
நாடி வந்திருக்கின்றனர்.அவர்களின் பலவித ஆத்மானு
அனுபவங்களுக்கு புதுச்சேரியே சரியான இடம் என்று
முடிவு எடுத்ததற்கு இப்புதுவையின் ஈர்ப்பு சக்தியே காரணம்.
சத்தியத்தின் நிலைகளை காணவும் தெய்வத்தினை
நோக்கிச்செல்லும் பாதையை அடையவும் இப்புதுச்சேரி
பெரியோர்க்கு உதவி வந்திருக்கின்றது.

ஸ்ரீ அரவிந்தர்,ஸ்ரீ அன்னை இருவரும் ஒருங்கே செய்த
முயற்சியால் இன்று புதுச்சேரி -உலகெங்கும் பிரசித்தி
பெற்ற ஒரு ஆன்மீக தலமாக விளங்குகிறது.


 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB