ஸ்ரீ லட்சுமண சுவாமிகள்

|

ஸ்ரீ லட்சுமண சுவாமிகள்
புதுவை, வழுதாவூர் சாலையிலுள்ள சண்முகாபுரம்
என்ற ஊரில் பரமசிவன் என்பவர்க்கு மகனாக
பிறந்தார் ஸ்ரீ லஷ்மண சுவாமிகள்.
நல்ல உயரம்-கருப்பு நிறம்-கட்டான தேகம்.
சுறுசுறுப்பான உடல்.
திருமண வயது வந்தவுடன் முனியம்மாள் என்ற
மங்கை நல்லாளை மணந்து இல்லறத்தை
நல்லறமாக நடத்தி வந்தார்.
சிறு வயது முதலே அம்பாளின் மேல் ஈடுபாடு
கொண்ட சுவாமிகள், திருமணமானவுடன்
வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டு, அம்பாளின்
பாதங்களை தஞ்சம் புகுந்தார்.
அவரின் பெற்றோர் அவருக்கு எவ்வளவோ
எடுத்துரைத்தும் அவருக்கு இல்லறத்தின் மேல்
நாட்டம் கொள்ளவில்லை. அம்பாளின் தீவிர
பக்தரானார். வீட்டை மறந்து ,தாய்-தந்தையரை
மறந்து, மனைவியையும் மறந்து மீனாட்சிபேட்டை
அம்பாள் கோவிலே சகலமும் என்றிருந்தார்.
யாராவது கொண்டு வந்து தரும் உணவை மட்டுமே
உட்கொண்டு வாழ்ந்தார்.
சுற்றத்தாரின் தொந்திரவினை தாங்க மாட்டாமல்
அங்கிருந்து அகன்று, மரக்காணம் செல்லும்
சாலையில் உள்ள புத்துப்பட்டு என்னும் ஊரில்
உள்ள ஐய்யனார் கோவிலில் வந்து குடியேறினார்.
தன் மேலாடையாக ஒரு சாக்கு துணியை போற்றிக்
கொண்டு- தெருவில் சுற்றிக் கொண்டிருப்பார்.
அதனால் அவரை “ சாக்கு சாமியார்” என்று
அழைப்பதும் உண்டு.
நாயுடன் பேசுவார்-அவராகவே பேசிக் கொள்வார்.
அம்பாளின் நாமங்களையே உச்சரித்துக் கொண்டு
இருப்பார்.
வானத்தில் கோடு போடுவது போல் ஏதாவது
செய்கை காண்பித்துக் கொண்டிருப்பார்.
யாராவது காசு கொடுத்தால் வாங்க மாட்டார்.
அப்படியே வாங்கினாலும் ஒரு காசை மட்டும்
வாங்கிக் கொண்டு அதை அப்படியும்,
இப்படியுமாக திருப்பி திருப்பி பார்த்து விட்டு
தூக்கி போட்டு விடுவார்.
இவர் கடைவீதியில் சென்றால், கடைக்காரர்கள்
தம் கடையில் சுவாமிகளின் கால் படாதா
என்று ஏங்குவார்கள். சுவாமிகளின் கால் பட்ட
இடம் ஒஹோ என்று விளங்குமாம்.
திடீரென்று ஏதாவது ஒரு கடையினுள் அவராகவே
நுழைவார்-கல்லாவை திறந்து அவராகவே காசு
எடுத்துக் கொள்வார். இல்லையென்றால் கல்லாவில்
உள்ள ஒரே ஒரு காசை மட்டும் எடுத்து தெருவில்
வீசி விட்டுச் சென்று விடுவார்.
அப்படிச் செய்தால் அந்த கடைக்காரருக்கு
நல்ல வியாபாரம் நடக்குமாம்.

   பக்தர்களின் குறைகளை கூர்ந்து கேட்பார்..
அதற்கு பரிகாரம் கூறுவார். அவர் சொல்படி கேட்டு
நடப்பவர்களுக்கு அக்குறை விரைவில் தீர்ந்து போகும்
என்பதை மக்கள் கண்டனர்- திடமாக நம்பினர்.
சுவாமிகள், அம்பிகையின் மேல் தீராத ஈடுபாடு
கொண்டிருப்பதை கண்ட மக்கள்-அவரை கடவுளின்
அவதாரமாகவே கருதினர்.
ஐய்யனார் கோவிலில் சுவாமிகள் படுத்து உறங்கிக் கொண்டிருப்பார். இரவு வேளைகளில், திடீரென்று
பக்தர்கள் யாராவது விழித்துக் கொண்டு பார்த்தால்
அவர் தலை வேறு- உடல் வேறாக தனித்தனியாக
கிடக்குமாம்..மறு நாள் காலையில் சுவாமிகள் நன்றாக
நடந்து செல்வதை மக்கள் ஆச்சரியத்துடன்
பார்த்திருக்கிறார்களாம்.
சுவாமிகள் பஸ் போகும் பாதையில் திடீர் திடீர்
என அமர்ந்து விடுவாராம். சுட்டெரிக்கும் வெய்யிலையும்
கடும் மழையையும் பொருட்படுத்தாமல் மணிக் கணக்காக உட்கார்ந்திருப்பாராம். அது ஏன் என
யாருக்குமே தெரியாதாம்.

சுவாமிகளின் பெருமையை அப்பகுதி மக்கள்
முழுவதும் அறிந்திருந்தனர்.

தான் அம்பாளின் பாதத்தை அடையும் தருணம்
நெருங்கி விட்டதை உணர்ந்த சுவாமிகள்
புத்துப்பட்டு ஐய்யனார் கோவிலின் பின்புறம்
இருந்த பத்மாசூரன் குளக்கரையின் அருகில் தியானத்தில் அமர்ந்து விட்டார்.
நாளடைவில் புற்று மண் வளர்ந்து –சுவாமிகள்
புற்றாகவே மாறி விட்டார்.
சுவாமிகள், 1947-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந்
தேதி சமாதியானார்.
(ராணுவ லாரியில் அடிபட்டு-மறு நாள் காலையில்
ஐய்யானார் கோவிலில் இறந்து கிடந்தவரை
கோவில் பின்புறம் சமாதி வைத்ததாகவும்-
ஒரு செய்தி உண்டு)

இன்றளவும் அவருடைய பக்தர்கள், அவருடைய
சமாதி பீடத்திற்கு வந்து சுவாமிகளுக்கு மலர்
அலங்காரம் செய்து அவருக்கு பிடித்த பால் பாயாசத்தை படைத்து அமைதியாக அமர்ந்து
தியானம் செய்து வழிபட்டுச் செகின்றனர்.

சுவாமிகளின் புற்றின் அருகில் ஒரு பெரிய
வேப்ப மரம் வளர்ந்து நிழல் தந்து வருகிறது.
அதை, திருடன் ஒருவன்  வெட்ட முயன்ற
போது- ”வெட்டாதே” என்று அசரீரி எழுந்தது.
அதை பொருட்படுத்தாத அக்கயவன் அம்மரத்தை
வெட்டியதால்-அங்கேயே விழுந்து விட்டான்.
இரவு முழுதும் அவனால் எழுந்திருக்க முடியாமல்
படுத்துக் கிடந்தான். மறு நாள் அவ்வழியே சென்ற
வழிப்போக்கர்கள் அவன் நிலையைக் கண்டு-அவனை
தூக்கிக் கொண்டு போய் அவன் வீட்டில் சேர்த்தனர்.
வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் அவனுடைய
உயிர் பிரிந்தது.
வெட்டிய மரத்தின் துண்டுகள்
ஐய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தின் போது
பயன்படுத்தப்பட்டது.
ஸ்ரீ லஷ்மண சுவாமிகளின் அருட்சக்தியை கண்ணால்
கண்டவர்கள் இன்றும் சிலபேர் உள்ளனர்.
அவரால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள் நல்ல நிலையில்
வசதியாக உள்ளனர்.
சுவாமிகளின் சமாதி பீடத்தினருகில் அமர்ந்து
மனமுருகி, உண்மையாய் வேண்டுபவர்களுக்கு
சுவாமிகளின் திருவருள் கிடைப்பது முற்றிலும்
உண்மை.
 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB