அன்ன தானம் 1

|

அன்ன தானம்


உலகில் தோன்றிய உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழ இன்றியமையாதது உணவேயாகும். உணவின்றி உயிரில்லை.உயிரின்றி உலகில்லை. உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்களுக்கு அளிப்பதே அன்னதானமாகும். அப்படிபட்ட உணவை பசித்தவர்க்கு அளிப்பது என்பது மிகவும் மேன்மையானது. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. பசித்தவர்க்கு உணவு கொடுப்பது என்பது உயிர் கொடுத்ததற்கு ஒப்பாகும்.
~அற்றார் அழிபசி தீர்த்தல் அக்தொருவன் பெற்றார் பொருள் வைப்புழி~ என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். ஏழைகள் பசியால் வாடும்போது, அன்னமிட்டு அப்பசியைப் போக்குபவன் இறையருளைப் பெறுவது உறுதி. இந்த புண்ணியபலன் சரியான சமயத்தில் நம் உயிரையும் காக்கும் என்பதே அவர் கருத்து. அன்னதாதாசுகி பவ – உணவு கொடுப்பவர் சுகமாக வாழ்வார் என்று மூதுரை உரைக்கிறது. அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலை காக்கும் என்றும் சந்ததிகளை வளமாக வாழ வைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னதானம் செய்வதால் எல்லா விதமான பலன்களும் கிடைக்கும்- வேண்டுதல்களும் நிறைவேறும். அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் இராமலிங்க சுவாமிகள் 1867 ஆம் ஆண்டு தர்மச் சாலையை நிறுவி, அனைவர்க்கும் உணவளித்து பசிப் பிணியை போக்கினார். அன்று அவர் ஏற்றிய அணையாஅடுப்பு இன்றளவும் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கிறது. பசித்தவர்களின் வயிற்றுக்கு உணவளித்து வருகிறது. அன்னதானத்தின் பெருமைகளை குறிப்பிடும்போது, சகமனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதியைப் பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து, கொல்லும் தருணத்தில், உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் வருத்தாது-வறுமை தீண்டாது-இறையருள் எப்போதும் துணை நிற்கும். என்றும் மனதில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும் என்று குறிப்பிடுகின்றார் வள்ளலார். பசித்தவர்களுக்கு பசியை நீக்குகின்ற விஷயத்தில் அடியாரை ஆண்டவன் தடுத்தாலும் கூட சிறிதும் தடைபடாமல் தம் கடமையை செய்ய வள்ளலார் வற்புறுத்துகின்றார். ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவற்றைச் செய்கிறவர்கள் கடவுளர்க்குச் சிறிதும் பாத்திரமாக மாட்டார்கள். பசியென்கிற அபாயத்தில் இருந்து நீங்கச் செய்கின்ற உத்தமர்களை எந்தச் சாதியினராயினும் எந்த சமயத்தவராயினும் எந்த செய்கை உடையவராயினும் அவர்கள் தேவர், முனிவர், சித்தர், போகர் முதலியவராலும் வணங்கத்தக்க சிறப்புடையவர்கள் ஆவர் என்கிறார் வள்ளலார். பசிப்பிணியை நீக்குபவர் பிறவிப்பிணியையே நீங்குவார் என்பார். 

 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB