சற்குரு ஸ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகள்

|

சற்குரு ஸ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகள்



பாரதத்தின் பல திசைகளிலிருந்து ரிஷிகளையும்
ஞானிகளையும் தவச்செல்வர்களையும்,சித்தர்களையும்,
தெய்வ நினைப்பில் ஆனந்த களிப்பு எய்தியவர்களையும்,
யோகிகளையும் ஈர்த்த சக்தி இப்புனித பூமியாம் இப்புதுவைக்கு
 உண்டு.மேலும் இலங்கை,பிரான்ஸ்,போன்ற அயல்
நாடுகளிலிருந்தும் உயர்ந்த மனிதர்கள் புதுச்சேரியை நாடி
வந்திருக்கின்றனர்.அவர்களின் பலவித ஆத்மானு
அனுபவங்களுக்கு புதுச்சேரியே சரியான இடம் என்று முடிவு
எடுத்ததற்கு இப்புதுவையின் ஈர்ப்பு சக்தியே காரணம்.
ஞானம் விளைகின்ற காரணத்தால், ஞானிகள் தவம் புரியும் 
இடமாக இருப்பதால்-இப்புதுவையை ஞான பூமி என்றே
அழைக்கிறார்கள்.
இத்தகைய சித்தர்கள் வாழ்ந்த பூமியில், புதுவையில் சில காலம்
வாழ்ந்தவர் தான் சற்குரு ஸ்ரீ அப்பா பைத்தியம் சுவாமிகள். 

ஒரு மகானின் அவதாரம் என்பது இறைவனின் வழிகாட்டுதலுக்கும்
தீர்மானத்துக்கும் உட்பட்டே அரங்கேறுகிறது.
அப்படி இறைவனால் தீர்மானிக்கப்பட்டு பூமியில் தோன்றிய போற்றத்தக்க 
ஓர் அவதாரம்தான் தவத்திரு.அப்பா பைத்தியம் சுவாமிகள்.



சற்குரு ஸ்ரீ அப்பா பைத்திய சுவாமிகளின் இயற்பெயர் முத்து.
ஜமீன் பரம்பரையில் பிறந்தவர். செல்வச்செழிப்பில் வளர்ந்தவர்.
1859-ம் வருடம் சித்திரைத் திங்கள் 28-ம் நாள் புனர்பூச நட்சத்திரத்தில்
கரூவூர் ஜமீன் குடும்பத்து வாரிசாக அவதரித்தார்.
சுவாமிகளுக்கு ஐந்து மாதமிருக்கையில்-பாட்டனார்,
தன் பேரன் இவ்வுலகை பரிபாலனம் செய்ய வந்துள்ளான்
என்று ஜாதகம் கணித்துக் கூறினார்.
எட்டு மாத குழந்தையான சுவாமிகளை கண்டுணர்ந்த -பசிக்கு
ஒதுங்கிய பரதேசி ஒருவர் “இது தெய்வக்குழந்தை” என்று
அருள்வாக்கு சொல்லி மறைந்தார்.

சுவாமிகளின் எட்டாவது மாதத்தில் தன் தாயையும்,பதினாறாம்
வயதில் தந்தையையும் இழந்தார்.
தான் என்னதான் சித்தப்பா
சித்தி யின் அரவணைப்பில் வளர்ந்திருந்தாலும் -சொந்த
பந்தங்கள் அன்பு காட்டினாலும் தன் தந்தையை இழந்தவுடன்
தான் தனிமையாகி விட்டதாக உணர்ந்தார்.
இறைவன் மேல் கோபம் கொண்டார். பூஜை அறையில்
இருந்த படங்களை போட்டு உடைத்தார்.
கையில் கிடைத்த சில தங்க நகைகளையும், சிறிது
பணத்தையும் எடுத்துக் கொண்டு யாரிடமும் சொல்லாமல்
வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.எங்கு போவது என்று
தெரியவில்லை இருந்தாலும் பழனி செல்லும் வண்டியை
பிடித்து பழனி மலையை அடைந்தார்.
கையில் இருந்த பணத்தைக் கொண்டு தேங்காய் வாங்கி
முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து மகிழ்ந்தார்.
பின்னர் எங்கே போவது என்று தெரியாமல் பழனிமலை
அடிவாரத்தில் இருந்த வினாயகர் கோயில் அருகில் 
வந்து அமர்ந்து கொண்டு -அழுதார்.
அங்கு தான் அவரின் குருவான மகான் ஸ்ரீ அழுக்கு சாமியார்
அவர்களின் அனுக்கிரஹம் கிடைத்தது.




அடுத்த பதிவில் தொடரும்.......

 

©2009 ஞான பூமி-புதுவை | Template Blue by TNB